National

“ஏழைகளின் நலன், சமூக நீதிக்கே முன்னுரிமை” – தெலங்கானாவில் பிரதமர் மோடி உறுதி | The top priority of our government is welfare of the poor says PM Modi at a public rally in Secunderabad

“ஏழைகளின் நலன், சமூக நீதிக்கே முன்னுரிமை” – தெலங்கானாவில் பிரதமர் மோடி உறுதி | The top priority of our government is welfare of the poor says PM Modi at a public rally in Secunderabad


ஹைதராபாத்: “எனது தலைமையிலான அரசின் முதன்மையான நோக்கம், ஏழைகளின் நலனே. அனைவருக்கும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தெலங்கானாவில் தலித் சமுதாயத்தின் ஒரு பிரிவான மடிகா சமூகத்தினர், மடிகா இடஒதுக்கீடு போராட்ட சமிதி என்ற அமைப்பின் மூலம் உள்ஒதுக்கீடு கோரி போராடி வருகின்றனர். இந்த அமைப்பின் நிறுவனத் தலைவராக மண்ட கிருஷ்ணா மடிகா உள்ளார். தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மடிகா இடஒதுக்கீடு போராட்ட சமிதி சார்பில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மோடியின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மண்ட கிருஷ்ணா மடிகா திடீரென உணர்ச்சிவசப்பட்டவராக அழத் தொடங்கினார். பிரதமர் மோடி அவரது தலையை கோதியும், கைகளை இறுகப் பற்றியும் தேற்றினார்.

இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, “எனது தலைமையிலான அரசின் முதன்மையான நோக்கம் ஏழைகளின் நலனே. அனைவருக்கும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. தெலங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின்போது, தெலங்கானா மாநிலம் அமையுமானால் அதன் முதல் முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இருப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தெலங்கானா மாநிலம் உருவான உடன் அதன் முதல் முதல்வராக கே.சந்திரசேகர ராவ் பதவியேற்றார். இதன்மூலம், தலித்துகளின் விருப்பத்தை அவர் நசுக்கிவிட்டார்.

தெலங்கானா மாநிலத்தை அமைப்பதில் அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி அப்பாவிகள் பலர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது. வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் தெலங்கானா உள்ளது. இந்தத் தேர்தல் தெலங்கானாவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது. தற்போதைய தெலங்கானா அரசு, தெலங்கானாவின் பாரம்பரிய பெருமையை பாதுகாக்கத் தவறிவிட்டது. மடிகா சமூகம் உள்பட ஒவ்வொரு சமூகத்தின் முதுகிலும் இந்த அரசு குத்திவிட்டது.

காங்கிரஸ் கட்சியும், பாரத் ராஷ்ட்ர சமிதியும் ஒன்றோடு ஒன்றாக உள்ளார்கள். திரைக்குப் பின்னால் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, இந்த தேர்தலில், ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் பாரத் ராஷ்ட்ர சமிதியும் உள்ளன. மறு பக்கம் பாஜக உள்ளது. மக்கள் மீது அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆனால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

நரேந்திர மோடி பேசிக்கொண்டிருந்தபோது, இளம்பெண் ஒருவர் திடீரென அங்கு அமைக்கப்பட்டிருந்த விளக்குகள் அமைப்பதற்காக நிறுவப்பட்ட தூண்களின் மீது ஏறினார். இதனைப் பார்த்து பதறிய மோடி, அந்தப் பெண்ணை உடனடியாக கீழே இறங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பதிலுக்கு அந்தப் பெண், உங்களிடம் பேச வேண்டும் என்பதற்காகவே ஏறினேன் என கூறினார். இதனையடுத்து அந்த பெண்ணை சமாதானப்படுத்தி, கீழே இறங்க வைத்தார்.

தெலங்கானா தேர்தல்: தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் நவம்பர் 3-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்ளை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் நாளை (நவம்பர் 13-ம் தேதி) பரிசீலிக்கப்படுகின்றன. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 15. தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடக்கிறது.

தெலங்கானா மாநிலம் உருவானது முதல் தொடர்ந்து 2 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகர ராவ், 3-வது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என அவர் உறுதியாக கூறி வருவது கவனிக்கத்தக்கது. இதனிடையே, தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க பாஜக, பாரத் ராஷ்ட்ர சமிதி, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்துள்ளன என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அதன் முழு விவரம் > தெலங்கானாவில் காங்கிரஸை வீழ்த்த பாஜக – பிஆர்எஸ் – ஏஐஎம்ஐஎம் மறைமுக கூட்டணி: ராகுல் காந்தி





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *