
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா துபாயில் நடந்தது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரை நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இப்போது நடந்த விழாவில், மணிரத்னம், கமல்ஹாசன்,த்ரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் ‘விக்ரம்’ படத்துக்கு சிறந்த இயக்குநர், நடிகர், பின்னணி பாடகர் உட்பட 5 விருதுகள் வழங்கப்பட்டன. கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியபடம் இது.
விழாவில் விருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் பேசும்போது கூறியதாவது: எல்லோரும் இங்கு எதிர்பார்ப்பது, கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்துடன் படம் செய்வது பற்றித்தான். அப்படி கேட்பவர்களுக்கு, பொதுவான ரசிகர்களுக்கு அவ்வளவுதான் தெளிவு. 13, 15 வருஷத்துக்கு முன் ‘கமல் 50’ என்று விழாஎடுத்தபோது, நான் ஒரு விஷயம் சொன்னேன்.
ரஜினிக்கும் எனக்குமான நட்பு போல இதற்கு முந்தைய தலைமுறையில் இல்லை என்று சொன்னேன். அந்தச் சவாலை நாம் பின்னோக்கி விட்டதற்கான காரணம், இனி வரமாட்டார்கள் என்ற சாபமாகக் கொடுக்காமல் அதை வாழ்த்தாகச் சொல்லிக்கொள்கிறேன். வரும் தலைமுறை இதிலிருந்து இன்னும் மேம்பட வேண்டும் என்பதுதான் என் ஆசை. என் ரசிகன், என் நண்பருக்கு படம் பண்ணுவது எனக்குத்தானே பெருமை. அதற்காக கிரிக்கெட் விளையாடும் போது பந்து போட்டால், பேட்டை எடுத்து ஸ்டெம்பை காட்டிக்கொண்டு நிற்க மாட்டேன்.
அது விளையாட்டு. தொடர்ந்து நாங்கள் மும்முரமாக போட்டி போடுவோம். ஆனால் தடுக்கிவிடுவதை செய்யமாட்டோம். அது நாங்களாக எடுத்துக்கொண்ட முடிவு. சின்ன வயதிலேயே அந்த அறிவுக்காக இருவருமே ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும். அந்த நட்புதான் எங்கள் சினிமா வாழ்க்கையை வளர்த்தது என்றால் அது மிகையாகாது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.