மதுரை: “இறந்த பிறகு தலைவர், கட்சி நிர்வாகிகள் எனது உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும்,” என தற்கொலைக்கு முன்பு தமிழக முதல்வருக்கு மானகிரி கணேசன் கடிதம் எழுதி இருப்பது தெரியவந்துள்ளது.
மதுரை மானகிரியைச் சேர்ந்தவர் கணேசன்(73). இவர் மதுரை ஆவினில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திமுக தொழிற்சங்க கவுரவத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற ஆவின் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவராக இருந் தார். கடந்த 2016 மற்றும் 2021-ல் மேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து, நேர்காணலிலும் பங்கேற்றவர். திமுக தீவிர தொண் டரான இவர், தமிழக முதல்வரின் அயராது பணிக்கு இடையூறாக இருக்கும் தமிழக ஆளுநர் ஆர்என்.ரவியை கண்டித்து 2023 ஜூன் 28-ம் தேதி மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள கலைஞர் சிலை அருகே தீக்குளித்தார்.
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், உடல் நலன் பாதித்து, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் மூலம் உதவி கேட்டும் கிடைக்காத விரக்தியில், கட்சியின் தலைமைக்கும், மதுரை நகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி, முக்கிய நிர்வாகிகளுக்கும் கடிதம் அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 29-ம் தேதி மானகிரியில் இருந்து ஆட்டோ மூலம் மதுரை பசுமலை அருகில் மூலக்கரை பகுதியிலுள்ள திமுக எம்எல்ஏ கோ.தளபதி வீட்டுக்குச் சென்றார் கணேசன்.
அங்கு அவரை சந்தித்த சில நிமிடத்தில் அவரது வீட்டின் முன்பாகவே தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரிடம் மதுரை 6-வது மாஜிஸ்திரேட் லட்சுமி மரண வாக்குமூலம் பெற்றார். இந்த வாக்குமூலம் அறிக்கையாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாக்குமூலத்தில் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு எதிரான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அடுத்தநாள் நள்ளிரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து திருப்பரங் குன்றம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், மானகிரி கணேசன் தற்கொலைக்கு சில நாளுக்கு முன்பு, தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது: “தமிழக மக்கள் நலன் கருதி அயராது உழைக்கும் முதல்வரின் பணிக்கு படையூறாக செயல்படும் தமிழக ஆளுநரை கண்டித்து போஸ்டர் ஒட்டினேன். பிறகு ஆளுநரை கண்டித்து தீக்குளித்தேன். இதில் உயிர் பிழைத்தாலும் உடல் நிலை மோசமாகி, எந்த நேரத்திலும் இறந்துவிடும் நிலையில் உள்ளேன். ஒருவேளை நான் இறந்தால் தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகளும் எனது உடலுக்கு மரியாதை செய்யவேண்டும் என்பது எனது நிறைவான ஆசை.
மதுரையில் பணிபுரியும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் நேர்மையானவர். அவர் மூலம் ஒருவரை அனுப்பி கட்சிக்காக எந்த அளவுக்கு உழைத்தேன் என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். நான் இறந்து விட்டால் மதுரை கேகே. நகரில் ஓரிடத்தை ஒதுக்கி, நல்லடக்கம் செய்ய உங்களது கட்டளையின் கீழ் நடக்கும் தொண்டனுக்காக ஓடோடி வரும் அமைச்சர் பி. மூர்த்திக்கு அறிவுறுத்துமாறு மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோல அவர் எழுதிய மேலும், சில கடிதங்களை போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.