
சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் ‘80-ஸ் பில்டப்’ வரும் 24-ல் வெளியாகிறது. 80-களின் பின்னணியில் உருவாகி இருக்கிற இந்த காமெடி படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். கடைசிக் கட்டப் பரப்பரப்பில் இருந்த இதன்இயக்குநர் கல்யாணிடம் பேசினோம். இவர் ‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ படங்களை இயக்கியவர்.
‘80-ஸ் பில்டப்’ என்கிற தலைப்பு ஏன்? ஏதாவது புதுமையா பண்ணலாம்னு யோசிக்கும்போது, முழுக்கதையும் எண்பதுகள்ல நடக்கிற மாதிரி பண்ணினா எப்படியிருக்கும்னு தோணுச்சு. பொதுவா படங்கள்ல பிளாஷ்பேக் காட்சியை, அந்தகாலகட்டத்துல நடக்கிற மாதிரி காண்பிச்சிருப்பாங்க. ஆனா முழு கதையையும் அந்தக் காலகட்டத்துல நடக்கிற மாதிரி பண்ணினாஎன்ன? அப்படின்னு உருவாக்குன படம்தான் ‘80-ஸ் பில்டப்’.
ரசிகர்கள் மோதிக்கொள்ளும் கதையா? எண்பதுகள்ல சினிமா மீதான மோகம் அதிகம். அந்த கால ரசிகர்களின் பின்னணியில் உருவாகி இருக்கிற படம் இது. கமல் ரசிகருக்கும் ரஜினி ரசிகருக்கும் நடக்கிற போட்டிதான். ரஜினிகாந்த் ரசிகரா ஆர்.சுந்தர்ராஜன் நடிச்சிருக்கார். அவர் கமல் ரசிகரான சந்தானத்தின் தாத்தா. இவங்க ரெண்டு பேருக்கும் நடக்கிற மோதல்தான் கதை. இது, ஒரே நாள்ல நடக்கிற படம்.
‘ஃபேன்டசி’யாகவும் இருக்கும்னு சொன்னாங்களே? ஆமா. ஒரு இறப்பு வீட்டுல கதை நடக்கும். உயிரில்லாம இருக்கிறவர் வீட்டுக்கு, மேல் உலகத்துல இருந்து எமதர்மன், சித்ரகுப்தன், விசித்திரகுப்தன் வருவாங்க. வந்தவங்க, தங்களோட வேலையை விட்டுட்டு, இந்த ரசிகர்கள் பண்ணுற கூத்தைப் பார்த்துட்டு, ‘இது நல்லாயிருக்கே’ன்னு ரசிக்க ஆரம்பிச்சுடுவாங்க. யார் கண்ணுக்கும் தெரியாம, அவங்க பண்ற காமெடியும் ரொம்ப ரசிக்கும்படியாக இருக்கும். எமதர்மனா கே.எஸ்.ரவிகுமார், சித்ரகுப்தனா முனிஸ்காந்த் , விசித்ரகுப்தனா ரெடின் கிங்ஸ்லி நடிச்சிருக்காங்க. ஹீரோயினா ராதிகா ப்ரீத்தி நடிச்சிருக்காங்க.
சந்தானம் கால்ஷீட்டுக்கு ஒரு வருஷம் காத்திருந்தீங்களாமே? வழக்கமா ஒரு கதையை ரெடி பண்ணிட்டேன்னா, ஆறு மாசத்துல ஷூட்டிங் போயிடறது வழக்கம். இந்த கதையை முடிச்சதும் இதுக்கு சந்தானம் சார்தான் கரெக்டா இருப்பார்ன்னு அவர்ட்ட கதை சொன்னேன். கதையை கேட்டுட்டு ரொம்ப ரசிச்சார். ஆனா, மற்ற படங்கள்ல நடிச்சுட்டு இருந்ததால உடனடியா கால்ஷீட் இல்லைன்னு சொன்னார். நானும் பிரபுதேவா படத்துல பிசியாயிட்டேன். பிறகு, எண்பதுகள்ல நடக்கிற கதை அப்படிங்கறதால அதுக்கான விஷயங்களுக்காக எனக்கும் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. பிறகு அவர் மற்ற கமிட்மென்டை முடிச்சுட்டு வந்தார். இந்தப் படத்தை ஆரம்பிச்சுட்டோம்.
படத்துல நிறைய நடிகர்கள் இருக்காங்க. அவ்வளவு பேரையும் சமாளிக்கிறது கஷ்டமா இல்லையா? இல்லை. ஒவ்வொரு பிரேம்லயும் 15 மெயின் நடிகர்கள், 600 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இருப்பாங்க. இவ்வளவு துணை நடிகரகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். அதிகமான துணை நடிகர்களைப் பயன்படுத் தியதுக்காக மறைந்த நடிகர் மயில்சாமி, ஒரு மாலையை எனக்குப் போட்டுட்டு போனார். அவங்களை கவனிக்கிறது பெரிய வேலையா இருந்தது. பீரியட் படம் அப்படிங்கறதால, பாக்கெட்ல யாராவது மறந்து போய் செல்போன் வச்சிருந்தா கூட பளிச்சுனு தெரிஞ்சிரும். அதை கவனிக்கிறதுதான் பெரிய வேலையா இருந்தது. மற்றபடி ஒண்ணுமில்ல.
குறைவான நாள்ல ஷூட்டிங்கை முடிச்சிட்டீங்கன்னு ஆச்சரியமா பேசறாங்களே? இந்த கதை அப்படி. கிட்டதட்ட ஒரே லொகேஷன். ஒரே காஸ்ட்யூம்ன்னு எல்லாம் பொருந்துச்சு. அதனால சீக்கிரம் முடிக்க முடிஞ்சுது. மற்ற கதையைஇப்படி குறைவான நாள்ல முடிக்க முடியுமான்னு தெரியல. நடிகர், நடிகைகள்ல இருந்து கேமராமேன் உட்பட மொத்த டீமோட ஒத்துழைப்பும் இருந்ததால குறைவான நாள்ல படப்பிடிப்பை முடிச்சுட்டோம்.
சந்தானம் ரொமான்டிக் ஹீரோவா நடிச்சிருக்காராமே? உண்மைதான். இதுல அவருக்கு இரண்டு சண்டைக்காட்சிகள் இருக்கு. எண்பதுகள்ல ஒரு படம் எப்படியிருக்குமோ அப்படித்தான் இதுல இருக்கும். அந்த காலகடத்துல நடக்கிறசண்டைக் காட்சிகள் மாதிரி இருக்கும். ஜிப்ரானோட பின்னணி இசை, கேமராமேன் ஜேக்கப்போட ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே அந்த காலகட்டத்தை கண்முன்னால கொண்டுவந்திருக்கிற மாதிரி இருக்கும். ரசிகர்களும் எண்பதுகள் மனநிலையில படம் பார்த்தா ரொம்ப நல்லாயிருக்கும்.
எண்பதுகள்ல சினிமா மீதான மோகம் அதிகம். அந்த கால ரசிகர்களின் பின்னணியில உருவாகி இருக்கிற படம் இது. கமல் ரசிகருக்கும் ரஜினி ரசிகருக்கும் நடக்கிற போட்டிதான் கதை.