
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுக்கு பாஜக மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டதால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால் அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த நளின்குமார் கட்டீல் கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தலைவர் பதவியை கைப்பற்ற மூத்த தலைவர்கள் சோமண்ணா, ஆர்.அசோகா, சுரேஷ்குமார், ரமேஷ் ஜிகஜினகி, சி.டி.ரவி, ஷோபா கரந்தலாஜே உள்ளிட்டோர் போட்டிபோட்டனர்.
அதிலும் முன்னாள் அமைச்சர் சோமண்ணா, ”எனக்கு மாநில தலைவர் பதவி வழங்கினால் சிறப்பாக செயல்படுவேன். கட்சி மேலிடத்தின் உத்தரவின்பேரிலே 2 தொகுதிகளில் போட்டியிட்டேன். நான் தோல்வி அடைந்ததற்கு அதுவும் ஒரு காரணம் ஆகும். கட்சி மேலிடம் எனக்கு வேறு பொறுப்புகளை வழங்கும் என நம்புகிறேன்” என வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் இளைய மகன் விஜயேந்திராவுக்கு பாஜக மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதால் பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் அமைச்சர்கள் சோமண்ணா, ஈஸ்வரப்பா, ஆர்.அசோகா, ரமேஷ் ஜிகஜினகி உள்ளிட்டோர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
தலித்துகளுக்கு முக்கியத்துவம் இல்லை: இதுகுறித்து சி.டி.ரவி கூறுகையில், ”கட்சி மேலிடத்தின் இந்த முடிவு குறித்து எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. அவற்றை ஊடகங்களில் வெளிப்படையாக விவாதிக்க முடியாது” என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜிகஜினகி, ”பாஜகவில் தலித்துகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. செல்வந்தர்களுக்கும், சாதி செல்வாக்கு கொண்டவர்களுக்குமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த மோசமான நிலை என்றைக்கு மாறுமோ?” என விமர்சித்துள்ளார்.
.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் சோமண்ணா அதிருப்தி காரணமாக பாஜகவை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாஜகவில் குழப்பமான சூழல் நிலவுவதால் எடியூரப்பாவும், அவரது மகன் விஜயேந்திராவும் அதிருப்தியாளர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.