டெல்லி: ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு பாலிவுட் நடிகைகள் ஆலியா பட், தீபிகா படுகோன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடிகை ஆலியா பட் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஓர் உலகம். ஓர் குடும்பம். ஓர் எதிர்காலம். இந்தியாவுக்கு இது ஒரு வரலாற்று தருணம். ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். நாடுகளுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கும் இந்த மகத்தான நிகழ்வைக் கண்டது பெருமைக்குரிய தருணம். உலக அரங்கில் நம் நாட்டின் தலைமை பொறுப்புக்கு இந்த உச்சி மாநாடு ஒரு சான்று” என பதிவிட்டுள்ளார்.
தீபிகா படுகோன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஜி20 உச்சி மாநாட்டை நடத்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் திறனை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ள முக்கியமான சாதனை இது. உலகளாவிய நடவடிக்கைகளை அணிதிரட்டுவதற்கான நம் திறனுக்கான சான்றாக இந்த மாநாடு அமைந்துள்ளது. மேலும் இது ஒற்றுமையை வலுப்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற வழிவகுக்கும். ஓர் உலகம். ஓர் குடும்பம். ஓர் எதிர்காலம்” என பதிவிட்டுள்ளார்.
ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக ஜி20 மாநாடு நடைபெறுவதால், அதற்கான ஏற்பாடுகளை, கடந்த சில மாதங்களாக மத்திய அரசு செய்துவந்தது. டெல்லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபம் மாநாட்டுக்காகத் தேர்வு செய்யப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் மாநாட்டுக்கு வரவில்லை.