டேராடூன்: உத்தராகண்ட மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 4வது நாளாக இன்று (புதன்கிழமை) நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட புதிய நிலச்சரிவால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை தோண்டும் போது ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி 4-வது நாளாக புதன்கிழமை காலை தொடங்கியது. இடிபாடுகளுக்குள் எஃகு குழாய்களை செலுத்தி தொழிலளார்களை மீட்கும் விதமாக புதிய இயந்திரத்தை நிர்மாணிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட புதிய நிலச்சரிவு காரணமாக மீட்புப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இடிபாடுகளுக்குள் குழாய்களை புகுத்தி அதன்வழியாக தொழிலாளர்களை மீட்கும் பணிகளைப் பார்வையிட்ட பின் உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ரூகேலா செய்தியாளர்கரளிடம் பேசியபோது, “துளையிடும் இயந்திரத்தின் உதவியுடன் குழாய்களை இடிபாடுகளுக்குள் உள்ளே செலுத்தி உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் புதன் மாலைக்குள் மீட்கப்படுவார்கள்.” என்று தெரிவித்தார்.
புதிய இயந்திரம் நிர்மாணிக்கும் பணி: நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள இடிபாடுகளுக்குள் 900 மில்லி மீட்டர் விட்டமுள்ள மெல்லிய எஃகு குழாய்களை செலுத்தி, அதன் வழியாக தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் உள்ளே புகுந்து வெளியேறுவதற்கு 900 மி.மீ., விட்டம் போதுமானதாக இருக்கும். 900 மி.மீ., 800 மி.மீ., விட்டமுள்ள மெல்லிய எஃகு குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ள புகுத்தி அதன்வழியாக தொழிலாளர்களை மீட்பதே திட்டம் என்று மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. உணவு பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை மற்றொரு குழாய் வழியாக விநியோகிக்கப்பட்டும், வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களுடன் அதிகாரிகள் அவ்வப்போது பேசி வருகின்றனர்.
முன்னதாக, உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.