புதுடெல்லி: உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேசமயம், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவையும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டுமானப் பணியின்போது சுரங்கம் இடிந்து விழுந்ததில், 40 தொழிலாளர்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரவமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக, உத்தரகாண்ட் அரசு விபத்து குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்த நிலையில், சில்க்யாரா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவுக்கான காரணங்களை ஆய்வு செய்ய, உத்தராகண்ட் அரசு அமைத்த குழுவில் உள்ள நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மீட்புப் பணிகள் குறித்து உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ரோஹில்லா (Abhishek Rohilla) கூறுகையில், “மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழாய் மூலம் பாதுகாப்பு பாதை அல்லது சிறிய சுரங்கப்பாதை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு தேவையான பொருட்கள் வந்துள்ளன. அவர்களுக்கான பிளாட்ஃபார்ம் தயாரிக்கப்படுகிறது. அதன்பிறகு எஸ்கேப் டனல் (escape tunnel) அமைக்கும் பணியும் தொடங்கப்படும். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர் தொடர்பை ஏற்படுத்த முடிந்ததாக என்எச்ஐடிசிஎல் அதிகாரிகள் கூறுகின்றனர்” என்றார். மீட்புப் பணிக்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம். இதுவரை, உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடந்தது என்ன? – உத்தராகண்டில் சார்தாம் எனப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியபுனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த புனித தலங்களை இணைக்கும் வகையில் ரூ.12,000 கோடியில் 900 கி.மீ. தொலைவுக்கு சார்தாம் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சீன எல்லை பகுதி வரை இந்த நெடுஞ்சாலை நீள்கிறது. பிரம்மோஸ் ஏவுகணைகளை சீன எல்லைக்கு கொண்டு செல்லும்வகையில், உலகத் தரத்தில் சார்தாம் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தராகண்டின் உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது உத்தரகாசியில் இருந்து யமுனோத்ரி செல்ல 106 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. புதிய சுரங்கப் பாதை அமைக்கப்பட்ட பிறகு இரு பகுதிகளுக்கு இடையிலான தொலைவு 26 கி.மீ. ஆக குறையும். மொத்தம் 4.5 கி.மீ. தொலைவு கொண்ட சுரங்கப்பாதையில் இதுவரை 200 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டு உள்ளது. இரவு, பகலாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நிலையில்,கடந்த 12-ம் தேதி தீபாவளிஅன்று அதிகாலை 4 மணி அளவில்சுரங்கப் பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, இந்திய – திபெத் எல்லை பாதுகாப்பு படை, எல்லை சாலை அமைப்பு, தேசிய நெடுஞ்சாலை துறையை சேர்ந்த மீட்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.