National

உத்தராகண்டில் கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம் | Efforts to rescue 40 workers trapped in tunnel construction work in Uttarakhand

உத்தராகண்டில் கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம் | Efforts to rescue 40 workers trapped in tunnel construction work in Uttarakhand


டேராடூன்: உத்தராகண்டில் புதிதாக கட்டப்படும் சுரங்கப் பாதை நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதில் 40 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கித் தவிக்கின்றனர். 2-வது நாளாக நேற்று மீட்பு பணி தொடர்ந்தது.

உத்தராகண்டில் சார்தாம் எனப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியபுனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த புனித தலங்களை இணைக்கும் வகையில் ரூ.12,000 கோடியில் 900 கி.மீ. தொலைவுக்கு சார்தாம் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சீன எல்லை பகுதி வரை இந்த நெடுஞ்சாலை நீள்கிறது.

பிரம்மோஸ் ஏவுகணைகளை சீன எல்லைக்கு கொண்டு செல்லும்வகையில், உலகத் தரத்தில் சார்தாம் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தராகண்டின் உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது உத்தரகாசியில் இருந்து யமுனோத்ரி செல்ல 106 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. புதிய சுரங்கப் பாதை அமைக்கப்பட்ட பிறகு இரு பகுதிகளுக்கு இடையிலான தொலைவு 26 கி.மீ. ஆக குறையும்.

மொத்தம் 4.5 கி.மீ. தொலைவு கொண்ட சுரங்கப்பாதையில் இதுவரை 200 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டு உள்ளது. இரவு, பகலாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நிலையில்,கடந்த 12-ம் தேதி தீபாவளிஅன்று அதிகாலை 4 மணி அளவில்சுரங்கப் பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, இந்திய – திபெத் எல்லை பாதுகாப்பு படை, எல்லை சாலை அமைப்பு, தேசிய நெடுஞ்சாலை துறையை சேர்ந்த மீட்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்றும் மீட்பு பணி தொடர்ந்தது.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சம்பவ இடத்துக்கு நேற்று வந்து ஆய்வு செய்தார். அவர் கூறும்போது, “சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். பல்வேறு படைகள், துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக பணியாற்றிவருகின்றனர். 40 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள்’’ என்றார்.

மாநில பேரிடர் மீட்பு படை வட்டாரங்கள் கூறியதாவது: 4.5 கி.மீ. நீளம், 14 மீட்டர் அகலத்தில் மலைப்பகுதியை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த 12-ம் தேதி எதிர்பாராதவிதமாக சுரங்கப் பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதில் ஜார்க்கண்டை சேர்ந்த15 பேர், உத்தர பிரதேசத்தை சேர்ந்த 8 பேர், ஒடிசாவை சேர்ந்த 5 பேர், பிஹாரை சேர்ந்த 4 பேர், மேற்குவங்கத்தை சேர்ந்த 3 பேர், உத்தராகண்டை சேர்ந்த 2 பேர், அசாமை சேர்ந்த 2 பேர், இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 40 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர்.

சுமார் 50 மீட்டர் தொலைவு உள்ள பகுதியில் அவர்கள் சிக்கிஉள்ளனர். அவர்கள் சுவாசிப்பதற்காக குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. குடிநீர், உணவு பொருட்களும் குழாய் வழியாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

‘விரைவில் மீட்கப்படுவார்கள்’: வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடிகிறது. 40 தொழிலாளர்களும் நலமாக உள்ளனர். சுரங்கம் இடிந்த பகுதியில் இதுவரை 15 மீட்டர் தொலைவுக்கு இயந்திரங்கள் மூலம் துளையிட்டு உள்ளோம். எஞ்சிய 35 மீட்டர் தொலைவுக்கு சுரங்கத்தை துளையிட்டு தொழிலாளர்களை பத்திரமாக மீட்போம். 200-க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மாநில பேரிடர் மீட்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *