
உதகை: உதகையில் 2-வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் மலர்த் தொட்டிகள் தயார் நிலையில் உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை மூலமாக உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகின்றன. அதேபோல, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசனின் போதும் வட மாநிலம் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
அதன்படி, நடப்பாண்டு இரண்டாம் சீசனுக்காக, தோட்டக்கலை துறை மூலமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உதகை தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்காக 60 ரகங்களில் 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்படவுள்ளன. மேலும், 15 ஆயிரம் மலர்த்தொட்டிகள் காட்சிப் படுத்தப்படவுள்ளன.
இதற்காக கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு உட்பட நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, ஆஸ்டர், வெர்பினா, ஜூபின், கேண்டிடப்ட் உட்பட 60 வகைகளில் பல்வேறு வகையான விதைகள் பெறப்பட்டு, பூங்காவிலும் உற்பத்தி செய்யப்பட்டன.
இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, கிரைசாந்தியம் வகையில் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை உட்பட 15 வண்ணங்களில் ஆயிரம் மலர்த் தொட்டிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நடவுப் பணிகள் முடிந்து, தற்போது தொட்டிகளில் மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. விஜயதசமி, ஆயுத பூஜை என தொடர் விடுமுறைகள் வரவுள்ளதால், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த விடுமுறை காலத்தில் 2-ம் சீசனுக்காக தயார் படுத்தப்பட்ட தொட்டிகள், பார்வை மாடங்களில் அடுக்கிவைத்து, சுற்றுலா பயணிகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும். தற்போது, பூங்காவில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மழையால் சேதமான பிரதான புல்தரை மூடப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், புல்தரையில் சுற்றுலா பயணிகள் நுழைய பூங்கா நிர்வாகம் தடை விதித்துள்ளது.