புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு விவரங்களை தேசிய நீதித் துறை தரவு தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று அறிவித்தார்.
தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தில் 80,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விவரங்கள் தேசிய நீதித் துறை தரவு தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இணைய வழியில் நிலுவை வழக்கு விவரங்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும்” என்றார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி சந்திரசூட்டின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.