மதுரை: உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஐ.மகேந்திரன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முயற்சியால் அதிமுகவில் இணைந்தார். இது அமமுக உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை திமுகவில் சேர்க்கும் நல்ல வாய்ப்பை அக்கட்சி கோட்டை விட்டுள்ளதாக அக்கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர்.
உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஐ.மகேந்திரன். இவர், அமமுக தலைமைக் கழக செயலாளர், மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தார். 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிடிவி.தினகரன் புதிய கட்சி துவங்கியதும் அக்கட்சியில் இணைந்தார். 2019-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் 31199(13.80%) வாக்குகளை பெற்றார். இதனால் அங்கு அதிமுக தோற்று, திமுக வென்றது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மகேந்திரன் 55491(26.11%) வாக்குகளை பெற்றார்.
இதனால் திமுக கூட்டணி வேட்பாளர் கதிரவன் தோற்று, அதிமுக வேட்பாளர் அய்யப்பன் வென்றார். இப்பகுதியில் தனக்கென தனி செல்வாக்குடன் இருப்பவர் என்பதை அடுத்தடுத்த தேர்தலில் நிரூபித்தவர். டிடிவி தினகரனின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். இவர் நேற்று முன்தினம் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மிகவும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இந்த இணைப்பை முன்னின்று நடத்தியுள்ளார். இது இப்பகுதியைச் சேர்ந்த அமமுக மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மகேந்திரனுக்கு நெருக்கமானர்கள் கூறுகையில், “2 தேர்தல்கள், பல ஆண்டுகள் என கட்சிக்காக சொந்த பணத்தை தொடர்ந்து செலவிட்டு வந்தார். இனியும் கட்சியால் எதிர்காலம் இருக்குமா என்ற சந்தேகம் வலுவானது. இந்த சூழலில் சில உறுதிமொழியின் அடிப்படையில் அதிமுகவில் இணைய உதயகுமார் பேச்சு நடத்தியதன் மூலம் அதிமுகவில் இணைந்து விட்டார்” என்றனர்.
அதிமுகவினர் கூறியது: “ஆர்.பி.உதயகுமாரின் சமீபத்திய மிக முக்கியமான ராஜதந்திர அரசியல் நடவடிக்கை இது. தென் மாவட்டங்களில் முக்குலத்து சமூகத்தினரில் சிலர் அதிமுகவிற்கு எதிராக உள்ளதாக தகவல் பரப்பப்படுகிறது. இது தவறு என்பதை காட்ட தேவர் ஜெயந்திக்கு அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி வந்து சென்றார். இந்த சூழலில் உசிலம்பட்டியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர், முக்குலத்து சமூகத்தை சேர்ந்தவர், டிடிவி.தினகரனின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர் அதிமுகவில் இணைந்தது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது.
இதன் மூலம் முக்குலத் தோர் அதிமுகவிற்கு எதிராக இல்லை என்பதையும், இதை உசிலம்பட்டி என்ற முக்கிய ஊரிலிருந்து நிரூபிக்கும் வகையில் இந்த இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது. இதன் மூலம் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு ஓபிஎஸ்சுடன் இணைந்த அய்யப்பன் எம்.எல்.ஏ-வுக்கும் செக் வைத்துள்ளார் உதயகுமார். எம்பி தேர்தலில் சீட், இதிலும் தோற்றால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு, 2 சட்டப்பேரவை தொகுதிகளாக பிரித்து மாவட்ட செயலாளர் பதவி என்ற 3 உறுதி மொழிகள் அதிமுக தரப்பில் வழங்கப்பட்டு்ளளதாக தகவல்.
எம்பி தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டால், அவருக்கு பதிலடி தர மகேந்திரன் சரியான தேர்வாக இருப்பார். அதிமுக நிர்வாகிகளுக்குக் கூட தெரியாமல் மிகவும் ரகசியமாக மகேந்திரனின் இணைப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது அமமுக-விற்கு இழப்பு என்பதைவிட தனக்கு எதிரானவர்களுக்கு பாடம் கற்பிப்பு, மு்க்குலத்தோரின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது, எம்.பி, எம்.எல்.ஏ தேர்தலில் சரியான வேட்பாளர் தேர்வு என பல்வேறு விசயங்களில் மகேந்திரனின் சேர்க்கை அதிமுகவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது” என்றனர்.
திமுகவினர் கூறுகையில், “மகேந்திரன் செல்வாக்கால் உசிலம்பட்டி ஒன்றியத்தில் 2019-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 2 பேர் வென்றனர். இவர்கள் தயவில்தான் திமுக ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றியது. உசிலம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்குகூட முதல்வர் அறிவித்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியவில்லை. மகேந்திரனை திமுகவில் சேர்க்க 2021 தேர்தலுக்கு முன்பு பேச்சு நடந்தது. அப்போது மகேந்திரன் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போதைய சூழலை நன்றாக பயன்படுத்தி திமுகவில் சேர்த்திருந்தால் உசிலம்பட்டி பகுதியில் திமுக மேலும் வலுவாகியிருக்கும். அவரை கோட்ட விட்டதில் திமுகவிற்கு இழப்பு தான்” என்றனர்.
அமமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதால் சந்தேகமே இல்லை. கட்சி தனது செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது” என்றார்.