மும்பை வான்கடேயில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை 2023-ன் அரையிறுதிப் போட்டி நாளானது இந்திய வெற்றியோடு கோலியின் 50வது சத உலக சாதனை நாளாகவும் அமைந்தது. இந்தப் போட்டியில் இடையில் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அப்போது நியூஸிலாந்து வீரர்கள் நட்பு ரீதியாக கோலிக்கு உதவினர். இது சக வீரர்களிடையே உள்ள சகோதரத்துவத்தையும் புரிந்துணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதற்காக நியூஸிலாந்து வீரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால், பழைய தலைமுறை ஆஸ்திரேலிய வீரர் சைமன் ஓ’டனல், “கோலிக்கு நியூஸிலாந்து வீரர்கள் உதவக் கூடாது. கோலி உங்கள் நாட்டையே போட்டு சாத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அவருக்குப் போய் உதவுவீர்களா?” என்ற ரீதியில் கேள்வி எழுப்பியுள்ளார். ஐபிஎல் வந்த பிறகே இந்திய வீரர்களுடன் ஆஸ்திரேலிய வீரர்கள், ஏன் பாகிஸ்தானிய வீரர்கள் உட்பட அனைவருமே நட்பு ரீதியாகப் பழகி வரும் சூழ்நிலை நிலவி வருகிறது. களத்தில் போட்டியை சவாலாக ஆடுவது, வேறு ஒரு வீரர் உடல் ரீதியாக துன்பப்படும் போது உதவுவது வேறு என்பது இன்றைய சூழ்நிலை. ஆனால், சைமன் ஓ’டனல் மைதானத்தில் ஆவேசமாக ஆடி எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜ் செய்து அவர்களை வெறுப்பேற்றி அதன் மூலம்தான் வெற்றி சாத்தியம் என்ற (அவ) நம்பிக்கையைச் சார்ந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் என்பதால் அவர் இந்தக் காலக்கட்டத்தில் அவரைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும் ஒரு கருத்தை வர்ணனையில் தெரிவித்துள்ளார்.
சென் ரேடியோவில் சைமன் ஓ’டனல் கூறியதாவது: “எனக்கு நியூஸிலாந்து அணியின் செய்கை பிரச்சினையாகயிருக்கிறது. விராட் கோலிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இந்திய அணி 400 ரன்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். நியூஸிலாந்து வீரர்கள் அப்போது போய் கோலிக்கு உதவ ஓடி வருகின்றனர். அவருக்குத் தசைப்பிடிப்பு என்றால் எதிரணியான நீங்கள் ஏன் அவருக்கு ஓடிப்போய் உதவுகிறீர்கள். அதுவும் உங்கள் அணியை அவர் பவுண்டரிகள், சிக்ஸர்களாகப் போட்டு துவைத்துக் கொண்டிருக்கும் போது?. ‘ஸ்பிரிட் ஆஃப் த கேம்’ என்பது விதிகளுக்குட்பட்டதாக இருந்தால் பரவாயில்லை. இது என்னவென்பது புரியவில்லை. அவர் உங்கள் அணியை கிழித்துத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஓடிப்போய் அவருக்கு உதவுவதென்றால் என்ன அர்த்தம்?.
நீங்கள் உதவக்கூடாது. அதுபற்றிய அக்கறையே இல்லாமல்தான் இருக்க வேண்டும். அவருக்கு கிராம்ப்ஸ் ஏற்பட்டதா?. அவரிடமிருந்து 20 மீட்டர்கள் தூரம் தள்ளியிருக்க வேண்டும். விராட் கோலி மட்டையைத் தூக்கி எறிந்தார். உடனே நியூசிலாந்து வீரர் போய் அவருக்கு மட்டையை எடுத்துக் கொடுக்கிறார்.. என்ன இது?. ‘போய் அவரே மட்டையை எடுத்துக் கொள்ளட்டும் என்றல்லவா இருக்க வேண்டும். அப்படிச் செய்வது பவுண்டரிகளும் சிக்ஸர்களையும் அடிப்பதை நிறுத்து என்று கூறுவதாகும்” என்று நியூஸிலாந்தின் நட்பு ரீதியான, மனிதாபிமான செயலை பழைய ஆஸ்திரேலிய அணியின் பார்வையில் விமர்சித்துள்ளார் சைமன் ஓ’டனல். இதையெல்லாம் கடந்து வந்துவிட்டனர் கிரிக்கெட் வீரர்கள். இவர் சொல்வதைப் பார்த்தால் அன்று வங்கதேசக் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், இலங்கை வீரர் மேத்யூஸிற்கு டைம்டு அவுட் கேட்டது மிக மிகச் சரியான செயல் என்று கூறுவார் போலிருக்கிறது.
ஆஸ்திரேலிய வீரர்கள் இப்போது நிறைய மாறிவிட்டனர். நட்பு ரீதிக்கு வந்து விட்டனர். இருப்பினும் எதிரணி வீரரின் ஷூ லேஸ் அவிழ்ந்து விட்டால் அதை கட்டி விடுங்கள் என்று இன்றும் அவர்களிடம் கேட்க முடியாது. அதைத்தவிர நட்பு ரீதியாக அவர்கள் மாறிவிட்டனர். கிரிக்கெட் ஆட்டத்தில் அதன் போக்கில் நடக்கும் விஷயங்களுக்கு எதிரணி வீரர்கள் மீது கோபத்தை இப்படிக் காட்டுவதும், மனிதாபிமான செயல்களை மறுப்பதும் அநாகரிகமானது என்று சைமன் ஓ’டனலுக்கு இன்னமும் கூட புரியவில்லை என்பதுதான் வருந்தத்துக்குரியது.
.