
மதுரை: தனக்கு கிடைக்காத போதிலும், இளைஞர்களுக்கு உயர்கல்வி கிடைக்கச் செய்தவர் தியாகராசர் கல்லூரியின் நிறுவனர் தியாகராசர் என இக்கல்லூரியின் பவளவிழா குறித்த நூல் வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மதுரை தியாகராசர் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு (75-ஆண்டு) கல்வியின் திறந்த கதவுகள் (தி டோர்ஸ் டு எஜூகேஷன்) என்ற நூல் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இக்கல்லூரியின் செயலர் க.ஹரி.தியாகராசன் வரவேற்று பேசினார். விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, நூலை வெளியிட்டு பேசியதாவது:
இக்கல்லூரியை உருவாக்கிய கருமுத்து தியாகராசர் சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்ற இடங்களுக்கு நேரில் சென்றவர். நதிக்கரை அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்று, நாமும் நதிக்கரையில் கல்லூரி ஒன்று தொடங்க வேண்டும் என திட்டமிட்டார். இதன்படி, வைகை நதிக்கரை மற்றும் தெப்பக்குளம் கரையையொட்டி இக்கல்லூரியை தோற்றுவித்தார். அவருக்கு உயர்கல்வி படிக்க, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மதுரையிலுள்ள இளைஞர்களுக்கு இக்கல்லூரி மூலம் உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கச் செய்தவர். இக்கல்லூரிக்கு காமராசர் உட்பட சிறந்த தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களின் கையெழுத்தை பார்க்கும்போது, அதுவே இக்கல்லூரியின் பெருமையை காட்டுகிறது.
எனது உறவினர் ஒருவர் இங்குள்ள மதுரா வங்கியில் பணிபுரிந்தார். இந்த வங்கிக்கு சிண்டிகேட் வங்கியின் நிறுவனர் வந்தபோது, அவரது வருகை குறித்த அறிக்கையை என்னுடைய உறவினர் சமர்ப்பித்துள்ளார். அப்போது, தியாகராசர் செட்டியார் நூலகத்திலுள்ள ஒரு புத்தகத்தை கூறி, அதில் குறிப்பிட்ட பக்கத்தை சொல்லி அதை படித்திருந்தால் இன்னும் சிறப்பாக அறிக்கை சமர்பித்து இருக்கலாம் என, கூறியிருக்கிறார். இது பற்றி எனது உறவினர் என்னிடம் அடிக்கடி கூறுவார். அந்தளவுக்கு ஆற்றல் படைத்தவர் இக்கல்லூரியை உருவாக்கிய தியாகராசர். அவரது வழியில் அவரது குடும்பத்தினர் சிறப்பாக நடத்திச் செல்கின்றனர். 75 ஆண்டு மட்டுமின்றி இன்னும் பல 75 ஆண்டுகளை கொண்டாட வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் பேசினார்.
விழாவில் இக்கல்லூரித் தலைவர் க.உமா கண்ணன் பேசியதாவது: இந்த நூல் தியாகராஜர் கல்லூரியின் வரலாறு மற்றும் பரிணாமத்தை கொண்டாடுகிறது. 75 ஆண்டுக்கு முன் அதன் தொடக்கத்திலிருந்து இப்புத்தகம் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, சிறப்புப் பாராட்டு மற்றும் 3 நிறுவனங்களை உருவாக்குபவர்களின் மகத்தான பங்களிப்புகள் இடம் பெறுகின்றன. கல்லூரி நிறுவனர் தியாகராஜன், டாக்டர் ராதா தியாகராஜன் மற்றும் எனது கணவர் கருமுத்து டி.கண்ணன் ஆகியோரின் நிலையான மதிப்புகள், தரமான கல்வி பற்றிய அவரது பார்வையைப் பாதுகாக்கிறது. கல்வி மட்டுமின்றி தியாகராஜர் கல்லூரி, ஒழுக்கக் கட்டமைப்பிலும் உறுதியாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தர்ம இயல்புகள் புத்தகமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்நூல், பல்வேறு அதிபர்கள், கல்வித் தலைவர்கள் ஆகியோரையும் கவுரவிக்கிறது. மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பல தசாப்தங்களாக இன்று இருப்பதை உருவாக்க உதவியது.
சமகால உலகின் சவால்கள், தங்குவதில் வெற்றி பெற்றது. நிறுவனர் குடும்பம் நிறுவனரின் பார்வைக்கு உண்மையாகவே இருக்கிறது. அடிப்படையில் முழுமையான கல்வியை வழங்குவதன் மூலம் சமுதாயத்திற்கு சேவை செய்வது சமூக நீதி, சமத்துவம் , அனைவரையும் உள்ளடக்கிய இலட்சியங்கள், ஒரு கல்வி கல்விசார் சிறப்பில் கவனம் செலுத்துகிறோம். இளையவர்களிடம் சரியான மதிப்பு, வலுவான பணி நெறிமுறைகளை விதைக்கப்படுகிறது. மரபு , நினைவாற்றல் இந்த முதன்மையான நிறுவனம் மூலம் வாழும். இது வரும் ஆண்டுகளில் மேலும் உயரும். இவ்வாறு பேசினார்.
முன்னதாக, பவளவிழா குறித்த புத்தகத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, டேபே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். புத்தகம் குறித்து ஆசிரியர் சந்தியா ஸ்ரீதர் பேசினார். கல்லூரி முதல்வர் பாண்டிராஜா நன்றி கூறினார். விழாவில் முன்னாள் முதல்வர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.