Sports

இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்: ஐசிசி நடவடிக்கை | பின்னணி என்ன? | former odi world champion Sri Lanka Cricket Team Suspended ICC Action

இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்: ஐசிசி நடவடிக்கை | பின்னணி என்ன? | former odi world champion Sri Lanka Cricket Team Suspended ICC Action


துபாய்: முன்னாள் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் உலக சாம்பியனான இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இருப்பதே இந்த இடைநீக்க நடவடிக்கைக்கு காரணம் என தெரிகிறது.

‘வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பம்’ என திரைப்படங்களில் வசனங்கள் வருவதை நாம் கேட்டிருப்போம். இலங்கை அணியின் தற்போதைய நிலையும் கிட்டத்தட்ட அதே தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. அணியின் நிர்வாக பணிகளை கவனிக்க இலங்கைக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் ஏழு பேர் அடங்கிய இடைக்கால குழு ஒன்றையும் அரசு நியமித்தது. இந்த அறிவிப்பை அந்த நாட்டின் விளையாட்டு துறை முறைப்படி வெளியிட்டது.

இந்த சூழலில் இலங்கை அணியை இடைநீக்கம் செய்துள்ளது ஐசிசி. “ஐசிசி-யின் முழு நேர உறுப்பினரான இலங்கை கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறி இயங்குவதாக தெரிகிறது. அதனால் கிரகிக்க வாரியத்தை இடைநீக்கம் செய்துள்ளோம். இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதை தீர்மானித்தோம்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விவகாரங்கள் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். மேலும், அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது” என ஐசிசி தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்: கடந்த 1965-ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அஸோஸியேட் உறுப்பினராக இணைந்தது இலங்கை கிரிக்கெட். 1981-ல் முழு நேர உறுப்பினர் அந்தஸ்தை பெற்றது. 1975 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 1996-ல் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2014-ல் டி20 உலக கோப்பையையும் இலங்கை வென்றுள்ளது. ரணதுங்கா, அட்டப்பட்டு, ஜெயசூர்யா, முரளிதரன், சமிந்தா வாஸ், ஜெயவர்தனே, சங்கக்கரா, தில்ஷன், மலிங்கா என சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மகத்தான மாவீரர்களாக திகழ்ந்த வீரர்கள் அங்கம் வகித்த அணி. கடந்த 2007 மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது.

தற்போது நிதி நெருக்கடி, நிர்வாக குளறுபடி காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு சிதைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை பட்டத்தையும் அந்த அணி வென்றது. இருந்தபோதும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

வெளியில் நடந்த சதியே காரணம்: “இலங்கையின் தோல்வி மிகவும் வருத்தமாக உள்ளது. இதற்கு நானே முழுப் பொறுப்பேற்கிறேன். இலங்கையின் மோசமான தோல்விக்கு வெளியில் நடந்த சதியே காரணம். எனக்கு அவகாசம் கொடுங்கள். இது பற்றி அனைத்தையும் சொல்கிறேன்” என முன்னாள் இலங்கை வீரர் பிரமோதய விக்ரமசிங்கே தெரிவித்தார். இவர் இலங்கையின் தேர்வு குழுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்காவின் சகோதரரும் , தற்போதைய இலங்கை கேபினட் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கா கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது, “1996 உலகக் கோப்பை வெற்றி இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய சாபம். ஏனென்றால், இதன்பிறகே கிரிக்கெட் வாரியத்தில் நிறைய பணம் புழங்கத் தொடங்கியது. அந்தப் பணத்தை திருட விரும்பியவர்களும் வாரியத்தில் பதவிக்கு வந்தனர்” என வெளிப்படையாக பேசினார்.

அவரைப் போல சமீப காலமாகவே இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் அந்நாட்டு விளையாட்டு அமைச்சரான ரோஷன் ரணசிங்கா. கடந்த மாதம், கிரிக்கெட் வாரிய ஊழலை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவையும் இதே ரணசிங்கா அமைத்தார். இந்த விவகாரம் ஐசிசி வரை சென்றது. இதன்பின் இந்தியா உடனான இலங்கையின் படுதோல்விக்கு பின் அதே ஐசிசிக்கு கடிதம் எழுதிய ரணசிங்கா, அக்கடிதத்தில் “வீரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள், நிர்வாகத்தில் இருக்கும் ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் ஆகியவற்றால் இலங்கை கிரிக்கெட் வாரியம் தடுமாறிவருகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

தொடர்ந்து ஊடகங்களிடம் பேசுகையில், “இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. அவர்கள் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இரண்டாவது உயர் அதிகாரியாக கருதப்பட்ட, செயலாளர் மொஹான் டி சில்வா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு மத்தியில்தான் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் ரணசிங்கா.

— ICC (@ICC) November 10, 2023





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *