காசியாபாத் (உத்தரப் பிரதேசம்): இந்துக்களை ஆதரிக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து ஆன்மிகத் தலைவரான ஆச்சாரிய பரமோத் கிருஷ்ணம், காசியாபாத்தில் செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறியது: “மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சி என்னை தேர்வு செய்யவில்லை. எனக்கு வருத்தம் இல்லை. இந்துக்களை ஆதரிக்க அவர்கள் விரும்பாமல் இருக்கலாம். இந்து குரு ஒருவர் நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரம் செய்வது சரியாக இருக்காது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது கட்சியின் முடிவு.
பகவான் ராமரை வெறுக்கக்கூடிய சில தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த தலைவர்கள் இந்து என்ற வார்த்தையையும் வெறுக்கிறார்கள். இந்து மத குருவை அவமதிக்க விரும்புகிறார்கள். இந்து ஆன்மிக குரு கட்சியில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. இண்டியா கூட்டணியின் முக்கிய குறிக்கோள் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும்; பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், சோகம் என்னவென்றால் அவர்கள் அளவுக்கு அதிகமாக மோடியை வெறுக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் இந்தியாவையும் வெறுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தால், அதை அவர்கள் எதிர்க்கிறார்கள். வந்தே பாரத் என ரயிலுக்கு பெயர் வைத்தால் அதை அவர்கள் எதிர்க்கிறார்கள். பிரதமரை குறைகூறுவதை யாரும் தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஆனால், அவரை வெறுப்பது சரியல்ல. எதிர்க்கட்சிகள் மிகவும் குழப்பம் அடைந்துள்ளன. அனைத்தையும் அவர்கள் மறந்துவிட்டார்கள்.
பெண்கள் குறித்து பிஹார் முதல்வர் கூறியதற்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனைத்துக்கும் மோடியையும், பாஜகவையும் குறை கூறுபவர்கள், இதில் அமைதி காப்பது மிகப் பெரிய தவறு. எதிர்க்கட்சிகள் தங்கள் தவறுக்குக்கூட மோடியை குற்றம் சாட்டுகிறார்கள். மிகவும் வஞ்சமான கட்சி காங்கிரஸ் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். மோடியின் உத்தரவு காரணமாகத்தான் அவர் இவ்வாறு கூறினாரா? நிதிஷ் குமாரின் பேச்சை மோடியும்கூட எதிர்த்திருக்கிறார். ஆனால், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் எதிர்க்காதது ஏன்?
கடந்த 10 ஆண்டுகளாக நாம் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நம் முகத்தில் தூசி படிந்திருக்கிறது. ஆனால், கண்ணாடியை நாம் துடைக்கிறோம். இண்டியா கூட்டணி என ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. காங்கிரஸ் கட்சி ஏமாற்றிவிட்டதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை நோக்கி ஆம் ஆத்மி கட்சி கை நீட்டுகிறது? காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மம்தாவை நோக்கி கை நீட்டுகிறார்.
நீங்கள் பாஜகவில் இணையப்போவதாகக் கூறப்படுகிறதே என கேட்கிறீர்கள். ஒருவர் பாரதம் குறித்தும், சனாதன தர்மம் குறித்தும் பேசினால், அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பாஜக அல்லது காங்கிரஸ் பற்றியது அல்ல இது. இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம் பற்றியது இது. அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைக்குக் கிடைத்த பரிசு இது.
வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு வலுவான போட்டியைக் கொடுக்க காங்கிரஸ் விரும்பினால், அது பிரியங்காவை முன் நிறுத்த வேண்டும். 2024 தேர்தல் என்பது மகாபாரத யுத்தம் போன்றது. ஆனால், ராகுல் காந்தி விருப்பம் இன்றி இருக்கிறார். நம்பகத்தன்மை மற்றும் ஏற்பு என்பதைப் பொருத்தவரை, பிரியங்காதான் மிகப் பெரிய தலைவர்” என்று இந்து ஆன்மிக தலைவரான ஆச்சாரிய பரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.