புதுடெல்லி: இந்திய மருத்துவத்தைப் பாராட்டி சீன தூதரக செய்தித் தொடர்பாளர் யு ஜிங் வெளியிட்ட பதிவு, வைரலாகியுள்ளது. இந்தியாவுக்கான சீன தூதர் யு ஜிங் சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “என் தொண்டை வலி மற்றும் கழுத்து வலியை திறம்பட குணப்படுத்திய இந்திய மருத்துவத்தை மனதாரப் பாராட்டுகிறேன். நியாயமான விலையில் நல்ல தரம். நம்பமுடியாதது!” என அவர் தெரிவித்திருந்தார்.
யு ஜிங்கின் இந்த பதிவு 5 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிக பார்வைகளை பெற்றுள்ளது. சீன தூதரக அதிகாரி ஒருவர் இந்திய மருத்துவத்தைப் பாராட்டி இருப்பது, இந்தியர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. யு ஜிங்கின் கருத்துக்கு பலரும் பதில் பதிவுகளை அளித்துள்ளனர். இந்திய மருந்துகள் ஒருபோதும் ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை என்று ஒரு பயனர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
“நேர்மறை கருத்தை பரப்பியதற்கு நன்றி. ஒரு நாள் இந்தியாவும் சீனாவும் மீண்டும் நெருங்கிய நண்பர்களாக மாறும் என்று நான் நம்புகிறேன். அந்த நாள் விரைவில் வரும் என்றும் நம்புகிறேன்” என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார். “உங்கள் மூலமாக இந்திய மருத்துவம் குறித்து கேட்டதில் மகிழ்ச்சி! தரம் மற்றும் மலிவு ஆகியவை கைகோத்து செல்கின்றன. தங்கள் பகிர்வுக்கு நன்றி!” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.