கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி ஆடியபோது ஒவ்வொரு போட்டியின்போதும் அணியின் பயிற்சியாளர் ஐகோர் ஸ்டைமேக், ஜோதிடர் பூபேஷ் சர்மாவை கலந்தாலோசித்த விவகாரத்தில் மேலும் பல விஷயங்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, முன்னாள் வீரர்கள் பயிற்சியாளருக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
கால்பந்து அணியை ஜோதிடரைக் கலந்தாலோசித்து தேர்வு செய்ததையும், இதற்காக ஜோதிடருக்கு இந்திய கால்பந்து கூட்டமைப்பு லட்சக்கணக்கில் அவருக்குப் பணம் கொடுத்ததாகவும் முன்னணி ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஜோதிடரிடம் வீரர்களின் சொந்த விவரங்களைப் பகிர்ந்தது நேர்மை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எழுப்பியுள்ளதாக இப்போது பயிற்சியாளர்களாகியிருக்கும் முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர்.
அணி நிர்வாகம் தவிர சொந்த விவரங்கள், ரகசிய விவரங்களை வெளி நபர்களுக்கு வெளியிடக் கூடாது என்று முன்னாள் கால்பந்து வீரர்கள் கவுரமாங்கி சிங் மற்றும் ஸ்டீவன் டயஸ் ஆகியோர் ஆங்கில ஊடகத்தில் கண்டித்துள்ளனர். கவுரமாங்கி சிங். இவர் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் டிஃபெண்டர், இவர் கூறும் போது, “அணி வீரர்கள் தேர்வில் ஜோதிடரின் ஆலோசனை என்ற விவரத்தையும் தாண்டி நேர்மை மிக முக்கியம். இது உரிமை மீறல் பிரச்சனையாகும். ஜோதிடரிடம் விளையாடும் 11 வீரர்களின் பெயர்ப் பட்டியல் மற்றும் அவர்களது சொந்த விவரங்களை அளிப்பது உரிமை பிரச்சினை” என்கிறார்.
ஒவ்வொரு போட்டியின் போதும் ஜோதிடர் பூபேஷ் சர்மாவிடம் பயிற்சியாளர் ஐகோர் ஸ்டைமேக் வீரர்களின் பிறந்த நாள், பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய விவரங்களை பகிர்ந்துள்ளார். இதற்காக ஜோதிடருக்கு இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்பு ரூ.12-15 லட்சம் வரை சம்பளம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின.
முன்னாள் வீரர் டயஸ் கூறுகையில், அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவது அவர்களின் ஆட்டத்திறன் பற்றியதாக இருக்க வேண்டுமே தவிர அவரது நட்சத்திரம், பிறந்த நேரமா தீர்மானிக்கும் என்று சாடினார். “ஒரு பயிற்சியாளராக அணியை ஜோதிடரைக் கேட்டுத்தான் தேர்வு செய்வதா? இது வீரர்களுக்குச் செய்யும் நியாயமாகாது. மேலும் ஆடும் லெவன் மற்றும் அணியின் உத்தி ஆகியவற்றை மூன்றாம் நபரிடத்தில் பகிரலமா? இந்தத் தகவல்கள் அணிக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாமே” என்று கேள்வி எழுப்பினார்.
லெவனையே பயிற்சியாளர் ஐகோர் ஸ்டைமேக் ஜோதிடரைக் கேட்டுத்தான் தேர்வு செய்ததாக முன்னணி ஆங்கில நாளேடு எழுதியிருந்தது. இதில் இன்னும் அதிர்ச்சித் தகவல் என்னவெனில் வீரர்கள் நட்சத்திரம் சாதகமாக இல்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நாள் சரியில்லை எனவே அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்ற அளவுக்கு ஜோதிடம் அணித்தேர்வில் தாக்கம் செலுத்தியதை அந்த ஊடக அறிக்கை வெளியிட்டிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னாள் வீரர் டயஸ் ஆங்கில ஊடகத்துக்கு கூறும்போது, “வீரர் ஒருவர் அணியிலிருந்து ட்ராப் செய்யப்படுவது தனது நட்சத்திரத்தினால் என்பதை அறிந்தால் எத்தனை ஏமாற்றமடைவார். அது ஒரு வீரரின் உத்வேகத்தையே அழிக்கும் செயல்” என்று சாடினார்.