Sports

“இந்திய அணி பயந்து விளையாடியது என்பதை ஏற்க மாட்டேன்” – மனம் திறக்கும் ராகுல் திராவிட் | World Cup final: After defeat to Australia, Rahul Dravid says India gave everything

“இந்திய அணி பயந்து விளையாடியது என்பதை ஏற்க மாட்டேன்” – மனம் திறக்கும் ராகுல் திராவிட் | World Cup final: After defeat to Australia, Rahul Dravid says India gave everything


பெரிதும் எதிர்பார்த்த உலகக் கோப்பை 2023 ஒருநாள் போட்டித் தொடர் இறுதிப் போட்டி எதிர் – உச்சக்கட்டம் எய்தி ஆஸ்திரேலியா பிரமாதமாக ஆடி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தொடர் முழுதும் அட்டகாசமாக ஆடி கடைசி ஆட்டத்தில் தோல்வியுற்றது பெரிய ஐரனி (irony). ஆனால் ‘தோல்விக்குக் காரணம் மிடில் ஓவர்களில் பயந்து பயந்து ஆடினோம் என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன்’ என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

இறுதிப் போட்டி முடிந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் திராவிட் கூறியது: “நாங்கள் பயந்து பயந்து விளையாடினோம் என்பதை ஏற்க மாட்டேன். முதல் 10 ஓவர்களில் 80 ரன்கள் அடித்தோம். ஆனால், விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்கும் போது உத்தியை மாற்றத்தானே வேண்டும்.

இறுதிப் போட்டியில் பயத்துடன் ஆடவில்லை. மிடில் ஓவர்களில் அவர்கள் அருமையாக வீசினார்கள். நாம் 3 விக்கெட்டுகளை அப்பகுதியில் இழந்தோம். எனவே, மீண்டும் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. ஒவ்வொரு முறையும் சரி அட்டாக் செய்யலாம் என்று நினைக்கும் போதெல்லாம் விக்கெட் விழுந்தது. விக்கெட்டுகளை இழக்கும்போது மறுகட்டுமான நோக்கத்துடன்தான் ஆட முடியும். அதற்காக தடுப்பாக ஆட வேண்டும், பாதுகாப்பாக ஆட வேண்டும் என்றெல்லாம் முதலிலேயே முடிவு செய்து விடவில்லை.

மதியம் நாம் பேட் செய்யும் போதுபந்துகள் பிட்ச் ஆன பிறகு கொஞ்சம் நின்று வந்தது. ஆனால், இரவில் பந்துகள் மட்டைக்கு நன்றாக, வாகாக வந்தன. நாம் பேட் செய்யும்போது ஒரு கட்டத்தில் பந்துகள் நின்று வந்ததால் பவுண்டரிகள் வறண்டன. அப்போது சிங்கிள்களாக ரொடேட் செய்தோம். ஆனால், பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை.

நாம் 280-290 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆஸ்திரேலியா 60 ரன்களுக்கு 3 விக்கெட் எனும்போது போட்டியின் போக்கு வேறு விதமாக இருந்திருக்கும். 240 என்பது ஒரே ஒரு கூட்டணி அமைந்தால் போதும், அந்த இலக்கை எட்டி விடலாம் என்பதான இலக்காகும்” என்றார் திராவிட்.

கடந்த டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியிலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதியில் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், இப்போது ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தோல்வி கண்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் திராவிட், “நான் இந்த 3 தோல்விகளிலும் பயிற்சியாளராக இருந்தேன், அன்றைய தினங்களில் நாங்கள் சரியாக ஆடவில்லை. டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் (இங்கிலாந்துக்கு எதிராக) கொஞ்சம் குறைவாக ஆடினோம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் முதல் நாளே ஆட்டத்தை இழந்து விட்டோம், ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்த பிறகு அன்று சரியாக வீசவில்லை. இங்கு இப்போது உலகக் கோப்பையில் பேட்டிங் சரியாகச் செய்யவில்லை. ஆனால் இந்தத் தோல்விகளுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட காரணத்தை வலியுறுத்தி கூற முடியாது. இந்த இறுதிப் போட்டியில் கூட ஒரு கட்டத்தில் கூட வீரர்கள் பெரிய போட்டி என்பதன் அச்சுறுத்தலையோ, பதற்றத்தையோ தங்கள் மீது ஏற்றிக் கொள்ளவில்லை என்று கூற முடியும். இந்தப் போட்டிக்கும் முன்பான வீரர்களின் ஆற்றலுணர்வும், மனப்போக்கும் பக்காவாக இருந்தது.

ரோகித் சர்மா ஒரு அற்புதமான தலைவராகச் செயல்படுகிறார். வீரர்களிடத்தில் ஓய்வறையில் தன் நேரத்தை செலவிடுகிறார். நிறைய திட்டங்கள், நிறைய உத்திகளை விவாதிக்கிறோம் ரோகித் இதிலெல்லாம் மிகுந்த ஈடுபாடு காட்டினார். அவரது பேட்டிங் நமக்கு எத்தனை பெரிய ஊக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

நாங்கள் பாசிட்டிவ், அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடினோம். ரோகித் சர்மா அத்தகைய அணுகுமுறைக்கான தன்னுடைய கடமையை உணர்ந்து ஆடினார். தொடர் முழுதுமே ரோகித் சர்மா அற்புதம்தான். ஒரு நபராகவும் ஒரு தலைவராகவும் அவரைப் பற்றி இதற்கு மேல் என்ன வேண்டும்.

ஓய்வறையில் நிறைய உணர்ச்சி முகங்கள், ஒரு பயிற்சியாளராக ஏமாற்றமடைந்த முகங்களைக் காண்பது கடினமாக உள்ளது. ஏனெனில் இவர்கள் எப்படி உழைத்தார்கள் என்பதை நான் அறிவேன். நிறைய தியாகங்களைச் செய்தார்கள். ஆனால், விளையாட்டின் தார்மிகம் இதுதானே. அது நிகழ்கிறது, இதுவும் நடக்கும் அவ்வளவுதான். ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த அணி நம்மை விட சிறப்பாக ஆடுகிறதோ அந்த அணி வெல்லும். இது விளையாட்டு விதி. நாளை சூரியன் உதிக்கவே செய்யும். நாம் இதிலிருந்து கற்றுக் கொள்வோம். சிந்திப்போம்… மேலே செல்வோம்.

ஒரு விளையாட்டு வீரனாக இதைத்தான் செய்ய முடியும். விளையாட்டில் பெரிய உச்சங்களும் உண்டு, தாழ்ச்சிகளும் உண்டு. ஆனால் மேலே சென்று கொண்டிருக்க வேண்டுமே தவிர நிறுத்தி விடக்கூடாது” என்று ராகுல் திராவிட் மனம் திறந்து பேசியுள்ளார்.

Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *