ஹைதராபாத்: வம்சி இயக்கத்தில் ரவிதேஜா நடித்துள்ள ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் ‘மாஸ் மகாராஜா’ என்று அழைக்கப்படும் ரவி தேஜா நடித்துள்ள புதிய படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’. காயத்ரி பரத்வாஜ், நூபுர் சனோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வம்சி இயக்கும் இப்படத்துக்கு ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பான் இந்தியா முறையில் உருவாகியுள்ளது. அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – களவுத் தொழிலுக்கு தைரியம் மட்டும் போதாது கொஞ்சம் புத்திசாலித்தனமும் தேவை என்று நாசர் பேசும் வசனத்துடன் தொடங்குகிறது ட்ரெய்லர். அப்படியான துணிச்சலும், புத்திசாலித்தனமும் கொண்ட திருடனாக வருகிறார் ரவிதேஜா. இந்தியாவின் மிகப் பெரிய திருடன் என்ற அடைமொழி படத்தின் தலைப்புக்கு கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபகால கேங்ஸ்டர் படங்களில் எழுதப்படாத விதியாக தவறாமல் இடம்பெறும் ‘கேஜிஎஃப்’ பாணி ஒளிப்பதிவு, புழுதி பறக்கும் ஸ்லோமோஷன் காட்சிகள், சைடு கேரக்டர்கள் இழுத்து இழுத்துப் பேசும் புல்லரிப்பு வசனங்களும் இதிலும் இடம்பெற்றுள்ளன. டீசரில் படு சுமாராக இருந்த கிராபிக்ஸ் இதிலும் அப்படியே இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை ஈர்க்கிறது. சரியான திரைக்கதையும், விறுவிறுப்பான காட்சியமைப்பும் இருந்தால் ஆக்ஷன் விரும்பிகளும் சிறப்பான விருந்தாக இப்படம் அமையும். ‘டைகர் நாகேஸ்வரராவ்’ தமிழ் ட்ரெய்லர் வீடியோ: