State

‘இதில் என்ன தவறு?’ – தமிழக அரசு நியமித்த உண்மை சரிபார்ப்புக் குழுவுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் கேள்வி | Can’t State Govt take action – HC question in the case against the Fact-Checking Commission

‘இதில் என்ன தவறு?’ – தமிழக அரசு நியமித்த உண்மை சரிபார்ப்புக் குழுவுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் கேள்வி | Can’t State Govt take action – HC question in the case against the Fact-Checking Commission


சென்னை: “பொய்ச் செய்திகள் பரவுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு தணிக்கை முறைதானே? இதில் என்ன தவறு ? காவல் துறைக்கு உதவுவதற்காகத்தானே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது?” என்று தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழுவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அனைத்து ஊடகத் தளங்களிலும் தமிழக அரசு, அமைச்சகங்கள், துறைகள், தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட கோவையை சேர்ந்த மருதாச்சலம் என்பவரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை கண்காணிப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்பின்னர், சமூக வலைதளங்களில் தவறான மற்றும் ஆபாச கருத்துகள் பகிரப்படுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க சமூக ஊடக பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, கடந்த மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மற்றொரு வழக்கை முடித்துவைத்தது. ஆனால், காவல் துறையை விட்டுவிட்டு “உண்மை சரிபார்ப்பு குழு” என அரசு அமைத்திருக்கிறது. குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டும் அல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி இது. காவல் துறையின் வரம்புக்கு வெளியே இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்தநிலையில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது. எனவே, தமிழக அரசு கடந்த அக்டோபர் 6-ம் தேதி பிறப்பித்துள்ள அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும். இந்த திட்டத்தின் இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் செயல்பட தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “இது தொடர்பாக, மத்திய அரசு ஏற்கெனவே விதிகளை வகுத்துள்ளது. தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழு, தகவல் தொழில் நுட்ப சட்ட விதிகளுக்கு முரணானது. மேலும், உண்மை சரிபார்ப்புக் குழுவை அமைக்க மத்திய அரசுக்குதான் அதிகாரம் உள்ளது. இது அரசின் கையில் உள்ள ஆபத்தான ஆயுதம்” என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “பொய்ச் செய்திகள் பரவுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு தணிக்கை முறைதானே? இதில் என்ன தவறு? காவல் துறைக்கு உதவுவதற்காகத்தானே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குழுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பிஹார் தொழிலாளர்கள் தொடர்பான தவறான தகவல்கள் பரவியது குறித்து சுட்டிகாட்டி, அரசு அமைத்துள்ள குழுவில் தகுதியான நபரைத்தான் நியமித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அந்த வழக்கின் முடிவை தெரிந்துகொள்ளலாம் எனக் கூறி, அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *