
அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில்ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம்வெல்லும் வாய்ப்பை இழந்தது. தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றிகளை வென்று குவித்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது கோடிக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.
இந்நிலையில் நேற்று போட்டி முடிவடைந்ததும் இந்திய அணி வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்றபிரதமர் நரேந்திர மோடி வீரர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது ஷமியை கட்டியணைத்து அவர், ஆறுதல் கூறினார். பின்னர், இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜாவுடனும் பிரதமர் பேசினார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில்,“அன்புள்ள இந்திய அணிக்கு, உலகக் கோப்பையில் உங்கள் திறமையும், உறுதியும் அபாரம். நீங்கள் மிகுந்த உத்வேகத்துடன் விளையாடி நாட்டுக்கு பெரும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுக்கு உறுதுணையுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆதரவு அளித்தது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். ரவீந்திர ஜடேஜா தனது எக்ஸ் வலைதள பதிவில், “எங்களுக்கு சிறந்த தொடராக இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியை குறுகிய காலத்தில்முடித்துவிட்டோம். நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம். ஆனால் எங்களது ரசிகர்களின் ஆதரவு எங்களை பயணிக்கவைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களின் ஓய்வு அறைக்கு வந்தது சிறப்பானது. இது மிகவும் ஊக்கம் அளித்தது” எனத் தெரிவித்துள்ளார்.
முகமது ஷமி தனது பதிவில், “துரதிர்ஷ்டவசமாக இறுதிப் போட்டியின் நாள் எங்களது நாளாக அமையவில்லை. தொடர்ச்சியாக எங்களது அணிக்கும், எனக்கும் ஆதரவு அளித்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி. பிரத்யேகமாக எங்களது ஓய்வு அறைக்கு வந்து எங்களது உற்சாகத்தை உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. திரும்பவும் மீண்டு வருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.