National

ஆந்திர வெள்ளத்தில் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்: சில மாவட்டங்களில் மீண்டும் கன மழை | Heavy rains lead to extensive crop damage in Andhra Pradesh

ஆந்திர வெள்ளத்தில் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்: சில மாவட்டங்களில் மீண்டும் கன மழை | Heavy rains lead to extensive crop damage in Andhra Pradesh


அமராவதி: ஆந்திராவில் வெள்ளத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.2 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் விஜயவாடா நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், குண்டூர், பல்நாடு, பிரகாசம், விசாகப்பட்டினம், நந்தியாலம், கோதாவரி மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் என்டிஆர் மாவட்டத்தில் மட்டும் 12 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து குண்டூர் மாவட்டத்தில் 7 பேரும் பல்நாடு மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 1,69,370 ஏக்கர் உணவுப் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. 18,424 ஏக்கர் பரப்பளவில் பூச்செடிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் 2.34 லட்சம் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். வெள்ளத்தால் 6.44 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42,702பேர் 193 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 24 மணி நேரமும் மருத்துவ முகாம் இருப்பது அவசியம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாக தலா 25 கிலோ அரிசி, ஒரு லிட்டர் பாமாயில், 2 கிலோ வெங்காயம், 2 கிலோ உருளைக்கிழங்கு மற்றும் ஒரு கிலோ சர்க்கரையை உடனடியாக வழங்கிட வேண்டும். வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி உடனே வழங்கிட வேண்டும்” என்றார்.

வெள்ள நிவாரணப் பணிகளுக்குஆந்திரா, தெலங்கானா அரசுகளுக்கு அரசியல், சினிமா, தொழில் துறையினர் உதவி வருகின்றனர். நடிகர்கள், பாலகிருஷ்ணா, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் 2 மாநிலங்களுக்கும் தலா ரூ. 50 லட்சமும், நடிகர் பிரபாஸ் தலாரூ. 1 கோடி என மொத்தம் 2 கோடியும்வழங்கியுள்ளனர். ஆந்திர மாநிலதுணை முதல்வர் பவன் கல்யாண்மாநிலத்தின் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் 400 பஞ்சாயத்துகளுக்கும் மொத்தம் ரூ.4 கோடியும் தெலங்கானாவுக்கு ரூ.1 கோடியும் வழங்கியுள்ளார்.

முதல்வர் சந்திராபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி 2 மாநிலங்களுக்கும் தலா ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்றமுன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா நேற்று டெல்லியில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும், ஆந்திர மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் ஊதியமாக ரூ.120 கோடிக்கான உறுதிமொழி சான்றிதழ் வழங்கப்பட்டது.

பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை தெலங்கானா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவின் சில மாவட்டங்களில் நேற்று மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கி உள்ளது.குண்டூர், பாபட்லா, அம்பேத்கர் கோனசீமா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் நேற்று காலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதில் ராஜமுந்திரி, அமலாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *