
விஜயவாடா: நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் ஆந்திர மாநில காவல்துறையினர் மத்தியில் ‘ஆறு’ விரல்களைக் காட்டும் வீடியோ அவரின் தொண்டர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி போலீஸார் கைது செய்தனர். அவரை வரும் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த10-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவை சந்திக்க பவன் கல்யாண் முற்பட்டார். இதற்காக ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா சென்றுகொண்டிருந்த அவரை, மாநில எல்லையில் வைத்தே ஆந்திர காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சட்டம்-ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு, சந்திரபாபு நாயுடுவை பவன் சந்திக்கக் கூடாது எனக் கூறி ஆந்திர மாநிலத்துக்குள் நுழையத் தடை விதித்தனர். இதனால், பவன் தனது கட்சித் தலைவர்கள் கரிக்காபாடு சோதனைச் சாவடியில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆந்திர பிரதேசம்-தெலுங்கானா எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார்.
இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. அதேநேரம், தன்னை தடுத்து நிறுத்திய போலீஸிடமும், ஜனசேனா ஆதரவாளர்களிடமும் பவன் கல்யாண் ‘ஆறு’ விரல்களைக் காட்டும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. 2024 தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் தான் இருக்கிறது. அதன்பின் ஆட்சி மாறும் என்பதை உணர்த்தும் வகையில் பவன் தனது ஆறு விரல்களை காட்டியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் பவனின் தொண்டர் படையால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.