விஜயவாடா: ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், 432 ரயில்களை தென் மத்திய ரயில்வே முழுமையாக ரத்து செய்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விடிய விடிய பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திர மாநிலத்தில் கடலோர ஆந்திரா, என்டிஆர், குண்டூர், நந்தியால், கோதாவரி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, என்டிஆர் மாவட்டத்தில் கன மழை பெய்ததால், விஜயவாடா நகரமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. விஜயவாடாவில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காணப் படுகிறது.
3-வது நாளாக கனமழை: 3-வது நாளாக நேற்றும் விஜயவாடா, குண்டூர், நந்தியால் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை தொடர்ந்தது. திருப்பதி, சித்தூர், நெல்லூர் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிகாரிகளுடனும், பேரிடர் மீட்பு குழுவினருடனும் படகில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களையும் வழங்கினார்.
“ஓரிரு நாட்கள் தைரியமாக இருங்கள். உங்களுக்கு எப்போதும் நான் உறு துணையாக நிற்பேன்” என்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். விடிய விடிய ஆய்வு பணிகளை மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு நேற்று அதிகாலை 4 மணி வரை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் காலை 7 மணி முதல், விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
விஜயவாடா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்தபடி வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்தும், வெள்ள பாதிப்பு குறித்தும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்ப வர்கள் குறித்தும் கேட்டறிந்தார். அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மின் இணைப்பு துண்டிப்பு: ஆந்திராவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள மக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. பிரகாசம் அணையின் மீது போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளது. 109 படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜயவாடாவில் மட்டும் 49 இடங்களில் 1.35 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் செல்போன் டவர்கள் செயலிழந்துவிட்டன. இவை போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல, தெலங்கானா மாநிலத்தில் கன மழை பெய்ததால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த மாநிலத்தின் நல்கொண்டா மற்றும் கம்மம் மாவட்டங்களில் அதிகமாக வெள்ள பாதிப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பலரை காணவில்லை: ஆந்திரா, தெலங்கானாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் கனமழை, வெள்ளத்தால் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரை காணவில்லை. இதையடுத்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழை காரணமாக தென் மத்திய ரயில்வே 432 ரயில்களை முழுவதுமாக ரத்து செய்துள்ளது. பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திரா, தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து இரு மாநில முதல்வர்களையும் பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்தார்.
விஜயவாடா: விஜயவாடாவில் பல இடங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். இந்த இடங்களில் அதிகாரிகள், அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விஜயவாடா சிங்க் நகர் முற்றிலுமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியில் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கிருஷ்ணா மாவட்டத்தில் மட்டும் 81 முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் லோகேஷ் கூறினார்.
அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை: ஆந்திராவில் பெய்த கனமழையால் விஜயவாடா மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அப்போது, கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் அரசு அதிகாரிகள் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கே வரவில்லை என முதல்வரிடம் பொதுமக்கள், அமைச்சர்கள் புகார் கூறினர்.
இதனால் கோபம் அடைந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, “வயதை பொருட்படுத்தாமல் நானே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறேன். மக்களுக்கு தைரியம் கூறுகிறேன். ஆனால், கடந்த ஆட்சியில் இருந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள், வீட்டில் தூங்கி கொண்டிருப்பதாக தெரியவருகிறது. இப்படி டிஎஸ்பி முதல் ஐஜி வரை சிலர் நடந்துகொள்கின்றனர். கடந்த ஆட்சியில் இருந்தவர்களுக்கு விசுவாசமாக இருக்கத்தான் உங்களுக்கு விருப்பம் என்றால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுங்கள்” என்று எச்சரித்துள்ளார்.