
சேலம் / ஈரோடு: ஆத்தூர், தம்மம்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பேருந்து நிலையம், அம்மாப்பேட்டை, ஜங்ஷன், கொண்டலாம் பட்டி உள்பட பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத் ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும், சாக்கடைகள் நிரம்பி கழிவுகள் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தின. ஏற்காட்டில் மழை, கடும் குளிர், பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மூடு பனியால் வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சாலைகளில் சென்று வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகக் குறைவாக காணப்பட்டதால் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் அதிகபட்சமாக 54 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக வறண்டு காணப்பட்ட ஆத்தூர் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது.
ஆத்தூரை கடந்து தலைவாசல் வரையிலும் வசிஷ்ட நதியில் மழை நீர் அதிகப்படியாக செல்வதையடுத்து கிராம மக்கள் பலரும் திரண்டு வந்து ரசித்து பார்த்துச் செல்கின்றனர். அதேபோல, மழையால் பயிர் சாகுபடிக்கு ஏற்றதொரு சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்: தம்மம்பட்டி 54, ஆத்தூர் 33, தலைவாசல் 32, கரியகோவில் 12, ஆணைமடுவு 10, வீரகனூர், பெத்தநாயக்கன்பாளையம் தலா 8, கெங்கவல்லி 4, சங்ககிரி, எடப்பாடி தலா 2 மி.மீ. மழை பெய்தது.
ஈரோட்டில் 4-வது நாளாக மழை: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிக அளவாக நம்பியூரில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. நம்பியூரை அடுத்த குளத்துப்பாளையம் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கோபி – அரசூர் சாலையில் தரைப்பாலம் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் நாளாக வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. 6 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருப்பதால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை பெய்ததால், காவிலிபாளையம் மற்றும் புளியம்பட்டி கணக்கரசம் பாளையம் தரைப் பாலங்கள் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்குள்ள முல்லை நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மாவட்ட அளவில் தொடர்ந்து மழை பெய்வதால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மழை வெள்ள நீரால், நெற்பயிர்கள் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஈரோட்டில் பெய்த மழை அளவு (மி. மீட்டரில்): நம்பியூர் – 123, பவானிசாகர் – 92, கொடுமுடி – 62, குண்டேரிப்பள்ளம் – 56.30, தாளவாடி – 44.20, சத்தியமங்கலம் – 43, வரட்டுப்பள்ளம் – 21.20, கொடிவேரி – 12, கோபி – 10.20, பெருந்துறை – 9.