புதுடெல்லி: அரசு மருத்துவமனையின் அவல நிலைமை குறித்து டெல்லிவாசி ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக் காட்டிய நிலையில், அதற்கு உடனடியாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதில் அளித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
அனுராக் ஜெயின் என்ற எக்ஸ் பயனர் ஒருவர், டெல்லியின் மிகப் பெரிய அரசு மருத்துவமனையின் படம் ஒன்றைப் பகிர்ந்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், டெல்லியின் நோயுற்ற மருத்துவமனை. கழிப்பறைகள் நிறைந்து வழிகின்றன. எங்கும் அழுக்காக இருக்கின்றது. இதுதான் டெல்லி மருத்துவமனையின் நிலை. படத்தில் இருப்பது யமுனையின் குறுக்கே உள்ள ஒரு மிகப் பெரிய அரசு மருத்துவமனை. அங்கு நோயாளிகள், நோயாளிகளுடன் இருப்பவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டே கழிப்பறையைக் கடந்து செல்கின்றனர். மருத்துவமனையில் சுகாதாரம் மருந்துக்குக் கூட இல்லை” என்று பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை டேக் செய்துள்ளார்.
இந்தப் பதிவு டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் கண்களில் பட, அதற்கு முதல்வர் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பதில் அளித்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “உயர் அதிகாரிகளுடன் அந்த மருத்துவமனைக்கு சென்று பார்க்குமாறு சுகாதார அமைச்சருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செப்டம்பர் மாதம் அருணா ஆசாஃப் அலி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் துறை கட்டிடத்தை திறந்து வைத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “என்னுடைய அரசு தலைநகரில் புதிதாக 11 மருத்துவமனைகளைக் கட்டுவதன் மூலமாக டெல்லியின் சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது நகரில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் மருந்துகள், பரிசோதனைகள் இலவசமாக கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லி நகர சுகாதார அமைப்பை உலகத் தரத்துக்கு நிகராக, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவுகோல்களுக்கு நிகராக உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று கூறியிருந்தது குறிப்பிட்டத்தக்கது.
दिल्ली का बीमार अस्पताल–
ओवरफ्लो पड़े है टॉयलेट, गंदगी की है भरमार ऐसे है दिल्ली के अस्पताल, तस्वीर है यमुनापार के सबसे बड़े जीटीबी अस्पताल की, जहां मरीज, तीमारदार,स्टाफ को मुंह पर कपड़ा बांधकर टॉयलेट के आगे से गुजरना पड़ता है।अस्पताल में सफाई व्यवस्था जीरो है। @ArvindKejriwal pic.twitter.com/rNUL3f43L5
.
— Anurag Jain (@mediaanurag) November 14, 2023