National

”அரசு எதையோ மறைக்கிறது” – நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் குறித்து காங்கிரஸ் விமர்சனம் | Something else behind the… Congress criticizes agenda of special session of Parliament

”அரசு எதையோ மறைக்கிறது” – நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் குறித்து காங்கிரஸ் விமர்சனம் | Something else behind the… Congress criticizes agenda of special session of Parliament


புதுடெல்லி: சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடைசி நேரத்தில் கட்டவிழ்த்து விடுவதற்கு பெரிய வெடிகுண்டை அரசு வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல்தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடுள்ள பதிவில், “சோனியாகாந்தி பிரதமர் மோடிக்கு கடைசியாக எழுதிய கடிதத்தின் அழுத்தம் காரணமாக, செப்.18ம் தேதி தொடங்க உள்ள 5 நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் பெரிதாக ஒன்றும் இல்லை. இவை அனைத்தும் நவம்பரில் நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்காலாம். வழக்கம் போல கடைசி நேரத்தில் அரசு நாடாளுமன்றத்தில் வெடிகுண்டைத் தூக்கிப் போடலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தத் திரைக்கு பின்னால் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது. இது எதனையும் பொருட்படுத்தாமல், இண்டியா கூட்டணிக் கட்சிகள் நயவஞ்சகமான தலைமைத் தேர்தல் ஆணையர் மசோதாவை உறுதியாக எதிர்க்கும்” என்று தெரிவித்துள்ளார். அதனோடு, சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை அரசு புதன்கிழமை வெளியிட்டது. அதில், செப்டம்பர் 18 ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் சம்விதான் சபாவில் தொடங்கி, நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்படும் என்று பட்டியலிட்டுள்ளது. அதேபோல், கூட்டத்தொடரின் போது தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் மற்றும் பிற தேர்தல் தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த மசோதா விவாதத்துக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மழைக்கால கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவைத் தவிர வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023 மற்றும் பருவ இதழ்களுக்கான பத்திரிக்கை மற்றும் பதிவுசெயதல் மசோதா 2023 ஆகியவையும் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் ஆக.3ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல், ஆக.10-ம் தேதி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலக மசோதா 2023-ம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியல் தற்காலிகமானதே. பின்னர் இவைகளில் கூடுதல் நிகழ்ச்சி நிரல்கள் சேர்க்கப்படலாம்.

இந்த நிகழ்ச்சி நிரல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், “இதுவரை வெளியிடப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் எழுப்பிய எந்த முக்கியமான பிரச்சினையும் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தலைப்புச்செய்தி நிர்வாக முறையினைக் கையிலெடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சி நிரல் குறித்து 140 கோடி இந்தியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், “காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இந்தியாவை அழுத்தும் மிகவும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்டு கடிதம் எழுதிய பின்னரும் அரசு அது குறித்து மவுனம் காப்பது துரதிர்ஷ்டவசமானது. மணிப்பூர் பிரச்சினை எங்கே? வேலைவாய்ப்பின்மை பிரச்சினை எங்கே? இமாச்சலப்பிரதேச இயற்கை பேரிடர் விவகாரம் எங்கே? மகாராஷ்டிர வறட்சி, பணவீக்கம் எல்லாம் எங்கே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிணமூல் தாக்கு: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தனது எக்ஸ் பக்கத்தில் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் கொள்கைகள் குறித்து அரசாங்கத்தை தாக்கியிருந்த தனது முந்தைய பதிவினை டேக் செய்து, “இந்த கடுமையான விமர்சனத்துக்கு ஏழு மணிநேரத்துக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அரசு நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடருக்கான கொள்கையை வெளியிட்டுள்ளது. இருந்தாலும் அதில் ஒரு எச்சரிக்கை உள்ளது. இதனை முழுமையனதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மலிவான தந்திரம்” என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் செப்.17ம் தேதி மாலை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக உறுப்பினர்களுக்கு கடிதம்: இதனிடையே செப்.18-ம் தேதி தொடங்கும் 5 நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நேர்மறையாக செயல்பட வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள த்ரீ லைன் விப்-ல், “செப்.18ம் தேதி திங்கள் கிழமை தொடங்கி 22ம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற இருக்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முக்கியமான அலுவல்கள் மீது விவாதம் நடைபெற்று அவை நிறைவேற்றப்பட இருக்கிறது என்று இதன் மூலம் அனைத்து பாஜக மக்களவை உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் செப்.18 முதல் 22 வரையிலான ஐந்து நாட்களும் தவறாமல் கூட்டத்தொடருக்கு வந்து கட்சியின் நிலைப்பாட்டினை ஆதரிக்க வேண்டும் என்று அனைத்து பாஜக மக்களவை உறுப்பினர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *