ஆலந்தூர்: தமிழ்நாடு அரசு சார்பாக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்போர் எண்ணிக்கையும் 6 மாத காலம் வரை தாய்பால் கொடுப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. மேலும் உடல் உறுப்பு தானத்தில் முதலமைச்சர் பதிவு செய்து இருப்பது நமக்கெல்லாம் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பாக உலக தாய்ப்பால் வாரம் மற்றும் உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி ஆலந்தூரில் நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் மருத்துவர். ஆர்.எஸ்.கிருத்திகாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆலந்தூர் நீதிமன்றம் அருகே தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியானது 5 கிலோமீட்டர் தூரம் வரை நடத்தப்பட்டது. உள்வட்ட சாலை வழியாக வேளச்சேரி ரயில் நிலையம் வரை சென்று மீண்டும் தொடங்கப்பட்ட நீதிமன்றம் அருகே நிறைவடைந்தது. இந்த போட்டியில் 5 வயது சிறுவர்கள் முதல் முதல் 70 வயது வரையிலான முதியவர் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மாநில மருத்துவர் அணி தலைவர் கனிமொழி சோமு எம்.பி, ஆகியோர் பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இந்த மாரத்தான் போட்டியில் 1000 கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது: ”தமிழ்நாடு அரசின் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்தில் தாய்பால் கொடுப்போர் 54 சதவீதத்திலிருந்து 60 சதவிதமாக உயர்ந்துள்ளது. குழந்தையின் 6 மாத காலம் வரை தாய்ப்பால் கொடுப்போர் 48 சதவீதமாக இருந்தது. இப்போது அரசின் விழிப்புணர்வு காரணமாக 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 100 சதவீதமாக உயரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாரத்தான் விழிப்புணர்வு நடைபெற்றது.
அதேபோல் உடல் உறுப்புதானம் என்பது உயிர் தானமாகும். ஒருவர் தரும் உடல் உறுப்புகளினால் 8 பேரின் உயிர்களை பாதுகாக்கிறது. 2008ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் தான் மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை முறை தொடங்கப்பட்டது. இப்போது திமுக அரசு பொறுப்பேற்ற பின் முதலமைச்சர் உத்தரவின் பேரில் 27 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சை செய்ய உரிமம் வழங்கப்பட்டு, இப்போது 40 மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி 2008 – 2024 ஜூலை வரை 1,929 கொடையாளிகள் கொடுத்த இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல் உள்ளிட்ட 6,995 முக்கிய உறுப்புகளும், 4,439 திசுக்களும் தானமாக வழங்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பாதுகாத்த அரசு தான் திமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும் பேசுகையில் முதலமைச்சர் அவரது துணைவியார் தங்களது உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்து இருப்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய வழிகாட்டுதலாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.