நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அரினா சபலெங்கா, டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸுடன் மோதினார். 3 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஜிவேரேவை 7-6 (7-2), 3-6, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார் டெய்லர் பிரிட்ஸ்.
அரை இறுதி சுற்றில் டெய்லர் பிரிட்ஸ், சகநாட்டைச் சேர்ந்த 20-ம் நிலை வீரரான பிரான்சஸ் தியாஃபோவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். பிரான்சஸ் தியாஃபோ கால் இறுதி சுற்றில் 9-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் தியாஃபோ 6-3, 6-7 (5-7), 6-3, 4-1 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது கிரிகோர் டிமிட்ரோவ் காயம் காரணமாக விலகினார். 26 வயதான டெய்லர் பிரிட்ஸ், கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும்.
அரை இறுதியில் இரு அமெரிக்க வீரர்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளனர். இதில் யாரேனும் ஒருவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார். அமெரிக்கஓபன் வரலாற்றில் 18 வருடங்களுக்குப் பிறகுதான் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் விளையாடுகிறார். கடைசியாக 2006-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் அமெரிக்காவின் ஆண்டி ரோடிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 7-ம் நிலை வீராங்கனையும் ஒலிம்பிக் சாம்பியனுமான சீனாவின் செங் குயின்வெண்ணுடன் மோதினார். இதில் அரினா சபலெங்கா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரை இறுதி சுற்றில் அரினா சபலெங்கா, 13-ம்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோவாவுடன் மோதுகிறார். எம்மா நவர்ரோவா கால் இறுதிச்சுற்றில் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் 26-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவை வீழ்த்தினார்.