சென்னை: துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார் உட்பட பலர் நடித்துள்ள படம்,‘மார்டின்’. ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை ஏபி அர்ஜுன் இயக்கியுள்ளார். பான் இந்தியா படமான இது அக்.11-ம் தேதி வெளியாக இருக்கிறது.
சென்னையில் நடந்த இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் அர்ஜுன் கூறும்போது, “துருவா என் தங்கையின் மகன். மருமகன் என்றாலும் மகன் போன்றவர். கடுமையாக உழைப்பவர். துருவாவின் ஐந்தாவது படம் இது. அவரது ஒவ்வொரு படமும் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவருக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக் கதையை எழுதியிருக்கிறேன். கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். 13 மொழிகளில் இந்தப்படம் டப்பாகி ரெடியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் யார் பார்த்தாலும், இந்தப் படம் பிடிக்கும். ஆக்ஷன், எமோஷன் என எல்லாம் இருக்கிறது. துருவாவுக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும்” என்றார்.
அவரிடம் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி கேட்டபோது, “சினிமா துறையில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை பிரச்சினை இருக்கிறது. அனைத்து இடங்களுக்கும் சென்று ஹீரோ காப்பாற்ற முடியாது. நீதிமன்றம் மூலமே இதற்கு நியாயம் கிடைக்கும். அனைவருக்கும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும்” என்றார்