Sports

“அதீத நம்பிக்கை, தன்னம்பிக்கையின்மை, கள வியூகம்” | இந்திய தோல்விக்கு காரணம்தான் என்ன? – ஓர் அலசல் | There could be some reasons behind the fall of Indian Team at the finals

“அதீத நம்பிக்கை, தன்னம்பிக்கையின்மை, கள வியூகம்” | இந்திய தோல்விக்கு காரணம்தான் என்ன? – ஓர் அலசல் | There could be some reasons behind the fall of Indian Team at the finals
“அதீத நம்பிக்கை, தன்னம்பிக்கையின்மை, கள வியூகம்” | இந்திய தோல்விக்கு காரணம்தான் என்ன? – ஓர் அலசல் | There could be some reasons behind the fall of Indian Team at the finals


இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக ஆடி வென்றது. நேற்றைய தினம் இந்திய அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. தோல்விக்கான காரணங்களை நிபுணர்கள் அலசுவார்கள். ஆனால், எந்த கரைகாணா அலசலும் ஒரு முடிவை எட்ட முடியாது என்பதுதான் விளையாட்டின் விதியாகும். விளையாட்டுதான் நம்மை விளையாடுகிறதே தவிர, நாம் விளையாட்டை விளையாடுவதில்லை என்று கூறப்படுவதுண்டு.

டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே எப்படி கடலடி பனிமலையும் வளர்ந்த இயற்கை – மனிதக் கட்டுமான முரண் (Irony) சுட்டப்பெறுகிறதோ அதேபோல் தொடர் முழுதும் இந்திய அணி பயங்கரமாக ஆடி வந்தது, நாம் கூட ‘இன்வின்சிபிள்’ என்றெல்லாம் எழுதினோம், பேசினோம். ஆனால், இந்திய அணி என்னும் டைட்டானிக் கப்பலைக் கட்டிக் கொண்டிருக்கும்போதே ஆஸ்திரேலிய சாம்பியன் ஸ்பிரிட் என்னும் கடலடிப் பனிமலை உருவாகி டைட்டானிக்கை கவிழ்க்கும் பனிமலையின் முகடாக ட்ராவிஸ் ஹெட் என்பவர் எழுச்சி பெற்றார் என்று பிற்காலத்தில் சுட்டப் பெறலாம்.

இந்த இறுதிப் போட்டியின் எமது முன்னோட்டப் பத்தியில் “இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதையும், ஆஸ்திரேலிய அணியினர் ‘நோட்’ செய்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு டைட் பவுலிங் பீல்டிங்கை ஆஸ்திரேலியா நாளைக் காட்டி, இந்திய அணியை சுருட்டினால் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்றே கூறலாம்.” (இந்தியா Vs ஆஸி… யாரிடம் ‘பலம்’ அதிகம்? – உலகக் கோப்பை இறுதிப் போட்டி முன்னோட்ட அலசல்) என்று எழுதியிருந்தோம், அதுதான் நேற்று இறுதிப் போட்டியில் நடந்தது.

உண்மையான சாம்பியன்கள் நாங்கள்தான் என்னும் படியாக ஆஸ்திரேலியா பயங்கரமாக ஃபீல்டிங் செய்தார்கள். இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் எதிராக அருமையான திட்டமிடலையும் அதனைச் செயல்படுத்திய விதமும் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தை ஒரு சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராவாக ஆக்கியது. இதுதான் உண்மையான ஒருங்கிணைந்த ஆட்டம் என்பது.

ஒரு கட்டத்தில் underdogs என்று இந்திய ஊடகங்களால் இகழப்பட்ட அணி, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்ற தமிழ் வர்ணனைக் குழுவின் ‘பொட்டலம்’ கருத்தையும் ஒன்றுமில்லாமல் தவிடு பொடியாக்கியது ஆஸ்திரேலிய அணி. இப்போது பொட்டலம் என்று இந்திய அணியை இவர்கள் கூறுவார்களா? 1983 உலகக்கோப்பையின் போது இந்திய அணியையே அனைவரும் ‘பொட்டலம்’ என்று கூறித்தானே கேலி பேசினர். கடைசியில் என்ன ஆயிற்று? அதுதான் ஐரனி என்பது.

ஊடகங்களும் முன்னாள்களும் இந்நாள்களும் இந்திய அணிதான் சாம்பியன், கோப்பையை இப்போதே கொடுத்து விடலாம் என்று பேசியும் எழுதியும் வலைதளங்களில் சொல்லாடல் மண்ணைக் கிளறி விட்டுக் கொண்டிருந்த போது இந்திய அணி மீது நாம் கடும் சுமையை ஏற்றுகிறோம், அழுத்தத்தை ஏற்றுகிறோம் இது பின்னடவை ஏற்படுத்தலாம் என்றெல்லாம் யோசிக்கவில்லையே. இது ஒரு விளையாட்டு, அதில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மட்டைக்கும் பந்துக்கும், பிட்ச் எனும் களத்தில் நடைபெறும் ஒரு விளையாட்டுப் போட்டி… இதை ஏதோ பெரிய யுத்தம் போலவும் இதில் வெற்றி பெற்று விட்டால் இந்தியாவில் வறுமை ஒழிந்து விடும், வல்லரசாகி விடும் என்பது போன்ற பில்ட் அப் எதற்கு?

10 அணிகள் மட்டுமே மோதும் உலகின் ஒரு மூலையில் நடக்கும் இந்த ‘உலக’க்கோப்பையை ‘India conquer the world’ என்றெல்லாம் எழுதி இந்திய அணியினரிடத்தில் இத்தகைய சுமையை, அழுத்தத்தை, வெற்றி என்னும் பதற்றத்தை உருவாக்கியதில் ஊடகங்கள், சமூக ஊடக இந்திய ரசிகப் பெருமக்களின் பங்கு அதிகம் என்றே கூற வேண்டியிருக்கிறது. நேற்று இந்திய அணி பயத்துடன் ஆடியது என்று கூறுவதை ஏற்கமாட்டேன் என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார். ஆனால் இந்தக் கூற்றின் அடியில் தொனிப்பது என்னவெனில், அதீத நம்பிக்கை என்னும் ‘ஓவர் கான்பிடன்ஸா?’ என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.

எல்லா எதிரணிக்கும் எதிராக ஒரே மாதிரி அட்டாக்கிங் உத்தியைக் கையாள்வது இந்த ஓவர் கான்பிடன்ஸின் வெளிப்பாடுதான். அந்தந்த எதிரணிக்கு எதிராக அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைக்கும் உத்திகளே, திட்டங்களே கைக்கொடுக்கும் வாய்ப்பு அதிகம். ரோகித் சர்மா நேற்று ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த பிறகு ஏன் மேக்ஸ்வெல் பந்தை தூக்கி அடிக்கப் போய் ‘பொறி’யில் சிக்கினார்? அவர்கள் மேக்ஸ்வெலை பந்து வீச அழைத்து லெக் திசையில் பவுண்டரியில் வீரர்களை அனுப்பி ஆஃப் திசையை காலியாக வைத்திருப்பதன் நோக்கம் என்ன? ரோகித் சர்மா காலியான ஆஃப் திசையில் அடிக்க ஒதுங்கிக் கொண்டு தூக்குவார், அப்போது கேட்ச் வாய்ப்பு உண்டு என்று கள வியூகம் அமைத்து அதில் வெற்றி கண்டனர்.

அப்படியிருக்கும்போது பாகிஸ்தானுக்கு எதிராக மாட்டியதே, இங்கிலாந்துக்கு எதிராக மாட்டியதே, நியூசி.க்கு எதிராக மாட்டியதே என்று அதே ஸ்ட்ரோக்கை ஆஸி.-க்கு எதிராக ஆடக் கூடாது என்பது பாலபாடம். கோலி இதில் கில்லாடி. ஆனாலும், அவராலும் நேற்று பவுண்டரி அடிக்க முடியவில்லை, முடக்கப்பட்டார்.

எல்லா போட்டிகளிலும் ரோகித் சர்மாதான் அதிரடி உத்தியை கையாள வேண்டும் என்ற அவசியமில்லை. நேற்று அவர்கள் ரோகித் மீது அதிகவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது, உத்தியை மாற்றி ஷுப்மன் கில்லை அழைத்து ‘நீ அடி, என்னை கவிழ்க்க திட்டமிடுகிறார்கள், அதனால் நீ கொஞ்ச நேரம் அடித்து ஆடு’ என்று உத்தியை மாற்றியிருக்க வேண்டுமே, ஏன் மாற்றவில்லை. மாறாக ட்ராவிஸ் ஹெட் நிதானமாகத் தொடங்கி கடைசியில் வெற்றியில் முடிந்தாரே. அதுதான் அணிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப உத்திகளை தற்காலிகமாக மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும், எல்லா சூழ்நிலைகளுக்கும் எல்லா களங்கள், எல்லா அணிகளுக்கும் எதிராக ஒரே உத்தி என்பது மூடநம்பிக்கைக்குச் சமம். இதுதான் ஓவர் கான்பிடன்ஸ். இதுதான் இந்திய தோல்விக்குக் காரணம் என்று கூறலாம்.

மாறாக, ஆஸ்திரேலியா ரோகித்தை விரைவில் காலி செய்ய உத்தி வகுத்தனர். ஆனால், கோலியை வீழ்த்த முடிவெடுக்கவில்லை. அவர் சுலபமாக ரன்கள் எடுக்கும் பகுதிகளை அடைத்து வெறுப்பேற்றி விட்டனர். உண்மையில், அட்டகாசமான திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தலாகும்.

ஒருபுறம் ஓவர் கான்பிடன்ஸ் போல் தெரிந்தாலும், அதனடியில் ஒரு தன்னம்பிக்கையின்மையும் தெரிந்தது. அதாவது இவ்வளவு நல்ல டீமை வைத்துக் கொண்டு கோப்பையை வெல்லும் அணி என்ற அடையாளத்தையும் ஏற்படுத்திய பிறகு பிட்சை ஏன் டாஸ் தீர்மானிக்கும் பிட்சாகப் போட வேண்டும் என்பதே. ஒரு நல்ல பிட்ச் அதாவது ‘true wicket’என்று கூறுவார்கள் அப்படி ஒரு பிட்சை அமைக்க வேண்டியதுதானே? ஏன் பந்துகள் மேலும் கீழும் வரும் ஒரு பிட்சை அமைக்க வேண்டும், முதல் பாதி ஒருவிதமாகவும் இரண்டாம் பாதி வேறு விதமாகவும் செயல்படும் பிட்சை ஏன் அமைக்க வேண்டும்? இது நமக்கு எதிராகவே திரும்பும் என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டாமா?

ஒரு புறம் பிட்ச் எல்லாம் ஒன்றுமில்லை என்று பேசிக்கொள்வது, இன்னொரு புறம் எங்களுக்கு இந்தப் பிட்ச்தான் வேண்டும் என்று கூறுவது ஏன் இந்த இரட்டை முரண் மனநிலை? மாறாக, ஆஸ்திரேலியா முரண்களற்ற தெளிவான சிந்தனை, திட்டமிடலுடன் இறங்கி மிக அருமையாக செயல்பட்டனர்.

அடுத்து என்ன? கொஞ்ச நாளைக்கு இந்தத் தோல்வியின் தாக்கம் இருக்கவே செய்யும். உடனே உடனே கிரிக்கெட் தொடர்களை போடாமல் ஒரு 15-20 நாட்களாவது வீரர்கள் இந்தத் தோல்வியை மறக்க சந்தர்ப்பமும் கால அவகாசமும் அளிக்க வேண்டும். அப்படி இல்லாமல் உடனே உடனே அடுத்தடுத்த தொடர்கள் என்றால் பெரும் தோல்விகளில்தான் போய் முடிந்து அணியே சீர்குலைவை நோக்கிச் சென்று விடும் என்ற ஆபத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *