சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக திமுக நிர்வாகி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன். இவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் தொட்டி, பேருந்து நிறுத்தம் கட்டியதில் முறைகேடு செய்ததாக திமுக நிர்வாகியான அருண் ஜீவா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரனுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக அதிமுகவைச் சேர்ந்த தினேஷ் என்பவர் அருண் ஜீவா மீது திருப்பூர் தெற்கு போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீஸாரும் கடந்த 2021-ம் ஆண்டு அருண் ஜீவா மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
திருப்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக நிர்வாகி அருண் ஜீவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அருண் ஜீவா தரப்பில், “ஆட்சேபத்துக்குரிய இந்த பதிவை மனுதாரர் தனது முகநூல் கணக்கில் இருந்து பதிவிட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த பதிவால் எந்த வகையிலும் பாதிக்கப்படாத தினேஷ் என்பவர் அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்,” என வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரனுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக திமுக நிர்வாகி அருண் ஜீவாவுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.