சென்னை: அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் வழக்காக விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார்.இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்க முடியாது. கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்த தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இடைக்கால தடை விதிக்க முடியாது. அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதித்து இருக்கக்கூடாது. இந்த உத்தரவு தனக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மனுவை பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
.
அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த மனுவை இன்றே விசாரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விரைவாக விசாரிக்க என்ன அவசரம்? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் செயல்பட முடியாத நிலை உள்ளதாக கூறினார். இதையடுத்து, நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.