
சென்னை: ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்குச் சென்றார், இயக்குநர் அட்லீ. இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்ததை அடுத்து அவருக்கு அங்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் அடுத்த படம் பற்றி யோசிப்பேன் என்று கூறியிருந்தார் அட்லீ. அல்லு அர்ஜுன் உட்பட பல நடிகர்களுடன் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஒரே படத்தில் விஜய் மற்றும் ஷாருக்கானை நடிக்க வைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அட்லீ இப்போது தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “ஜவான் படப்பிடிப்பின்போது விஜய், ஷாருக்கான் சந்தித்தார்கள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு என்னிடம் ஷாருக்கான், எப்போதாவது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் படத்தை இயக்கும் எண்ணமிருந்தால் நாங்கள் ரெடி என்றார். அதையேதான் விஜய் அண்ணாவும் சொன்னார். அதனால் அதற்கான கதையை கஷ்டப்பட்டு எழுதி வருகிறேன். இது என் அடுத்தப் படமாகக் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.